ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் வரை போராட வேண்டியது ஜனநாயக சக்திகளின் கடமை- திருமாவளவன்.!
ஆளுநரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த திருமாவளவன், அவரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் வரை போராட வேண்டியது மக்களின் கடமை என கூறியுள்ளார்.
ஆளுநர் ரவி பேச்சு: சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகையில், குடிமைப்பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுடன், தமிழக ஆளுநர் ரவி இன்று கலந்துரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில் ஸ்டெர்லைட் போராட்டம் மக்களை தூண்டிவிட்டு நடத்தப்பட்டது எனவும், நாட்டின் தேவையை நிறைவேற்றி வந்த ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டி விட்டு மூடிவிட்டனர் எனவும் கூறினார்.
கண்டனம்: மேலும் ஆளுனரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட 20க்கும் மேற்பட்ட மசோதாக்கள் கிடப்பில் இருப்பதை சுட்டிக்காட்டி கூறிய ஆளுநர், அவை நிராகரிக்கப்பட்டதாக அர்த்தம் என்று கூறினார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
ஜனநாயக சக்திகளின் கடமை: இந்த நிலையில் ஆளுநரின் இந்த பேச்சை கண்டித்து பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநரின் இந்த செயல் ஜனநாயகத்திற்கு விரோதமானது, பொது மக்களுக்கு எதிரானது. ஆளுநரை தமிழ்நாட்டை விட்டு வெளியேற்றும் வரை போராட வேண்டும், அதுதான் ஜனநாயக சக்திகளின் கடமை என்று கூறியுள்ளார்.