விஜய்க்கு எதிராக களமிறக்கப்பட்டாரா உதயநிதி.? 2026இல் யாருக்கு சாதகம்.? யாருக்கு பாதகம்.?

2026 தேர்தலை கருத்தில் கொண்டு திமுக இளைஞர்களின் வாக்குகள் வேறு எங்கும் சிதறிவிட கூடாது என்ற நோக்கத்தில் தான் உதயநிதி துணை முதலமைச்சராக பதவியமர்த்தபட்டுள்ளார் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Deputy CM Udhayanidhi Stalin - TVK Vijay

சென்னை : 2021 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ, அடுத்த சில மாதங்களில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர், அதற்கடுத்து திமுக இளைஞரணித் தலைவர், தற்போது தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் என 3 ஆண்டுகளில் தமிழக அரசியல் வட்டாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக வளர்ந்து நிற்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

மு.க.ஸ்டாலின் – உதயநிதி :

திமுக அரசியல் வட்டாரத்தில் மூத்த அமைச்சர்கள் பொறுப்பில் இருக்கும் போது, துணை முதலமைச்சர் பொறுப்பு தற்போது உதயநிதிக்கு கொடுக்க வேண்டிய அவசியம் என்ன.? 2009இல் முதலமைச்சராக இருந்த கலைஞர் கருணாநிதிக்கு வயது மூப்பு காரணமாக கட்சி மற்றும் அரசு நிர்வாக பணிகளை கவனிக்க அரசியல் களத்தில் நீண்ட வருடங்கள் செயலாற்றிய மு.க.ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுக்கப்பட்டது.

தேர்தல் களத்தில் மு.க.ஸ்டாலின் அளவுக்கு அனுபவமில்லாத, 3 ஆண்டுகள் மட்டுமே மக்கள் பிரதிநிதி அனுபவம் கொண்ட உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பு ஏன் கொடுக்கப்பட்டது.? தற்போது மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் பொறுப்பில் தொய்வில்லாமல் செயல்பட்டு வருகையில் அவசர கதியில் துணை முதலமைச்சர் பொறுப்பு உதயநிதிக்கு கொடுக்கப்படவேண்டிய நிலை என்ன என அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.

விஜயின் தவெக :

அதற்கு விடையாக பலர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தை காரணம் கூறுகின்றனர். சினிமா வட்டாரத்தில் மிக பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்ட விஜய், தனது ரசிகர் மன்றங்களை மக்கள் இயக்கமாக மாற்றி அரசியல் பணிகளை சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டார். மேலும், அண்மையில் தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை ஆரம்பித்து சினிமாவில் இருந்து ஓய்வு என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்து தனது அடுத்தகட்ட பாதையாக தமிழக அரசியலை விஜய் தேர்வு செய்துள்ளார்.

விஜயின் ‘தேர்தல் அரசியல்’ என்பது திராவிட சித்தாந்தத்தை சுற்றி இருக்கும் என அவரது அண்மைக்கால செயல்பாடுகள் வெளிப்படுத்துகின்றன. ஏற்கனவே ரசிகர் மன்றம் மூலம் அரசியலுக்கான அடித்தள கட்டமைப்பை உருவாக்கி வைத்துள்ள விஜய் அதனை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தி வருகிறார். நிச்சயம் 2026 சட்டமன்ற தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்கு விகிதத்தை விஜய் பெறுவார் என்கிறது தமிழக அரசியல் வட்டாரம்.

இதுதான் காரணமா.?

இப்படியான சூழலில் தான் உதயநிதி துணை முதலைச்சராக களமிறக்கப்பட்டுள்ளார். திமுகவின் இளம் தலைமுறையினர்கள் மத்தியில் மிக பிரபலமாக இருக்கும் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி கொடுத்து அடுத்த திமுக தலைவர் இவர் தான் அறிமுகம் செய்து வைப்பதன் மூலம் திமுகவின் அடுத்த தலைமுறை உற்சாகத்துடன் தங்கள் அரசியல் பணிகளை மேற்கொள்வார்கள் என்றும், அடுத்த தலைமுறை வாக்குகள் வேறு எங்கும் சிதறாமல் இருக்க , குறிப்பாக தங்கள் ஆஸ்தான நடிகர்கள் பக்கம் இளைஞர்கள் வாக்குகள் சிதறாமல் இருக்க இந்த துணை முதலமைச்சர் அறிவிப்பு என்பது அவசியம் என்றும் கூறப்படுகிறது.

உதயநிதி vs விஜய் :

இவ்வாறான அரசியல் மாற்றங்கள் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை கருத்தில் கொண்டே நகர்த்தப்பட்டு வருகிறது. 2026இல் ஒருவேளை திமுக முதலமைச்சர் வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் (அதற்கு பெரும்பாலும் வாய்ப்புகள் குறைவு) என அறிவிக்கப்பட்டால், உதயநிதி vs விஜய் என அரசியல் களம் மாறினால் , நிச்சயம் விஜய்க்கு தமிழக அரசியலில் குறிப்பிடத்தக்க வெற்றி (இரட்டை இலக்க தொகுதிகள்) கிடைக்க அதிக வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

அப்படி அல்லாமல் முதலமைச்சர் வேட்பாளர் மு.க.ஸ்டாலின் தான் என்றால், உதயநிதியை துணை முதலமைச்சராக மாற்றியதன் மூலம் திமுகவின் அடுத்த தலைமுறை இளைஞர்கள் வாக்குகள் மாற்றப்பக்கம் சிதறாமல் இருக்கும் என்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

அடுத்த ஓராண்டில் இதுவரை இல்லாத அளவுக்கு அரசியல் மாற்றங்கள் நிகழும் என்றும், அதனால் மக்கள் தீர்ப்பு எப்படி வேண்டுமானாலும் மாறலாம் என்றும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்