அதிமுகவுக்கு கிடைத்த வெற்றியை திமுக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தானது – ஓபிஎஸ், ஈபிஎஸ்

Default Image

அதிமுகவின் வலியுறுத்தலால் கிடைத்த வெற்றியை திமுக, தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தானது.

மருத்துவ படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு அதிமுகவின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில் மருத்துவப் பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அளிக்கப்பட்ட 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் மூலம் அதிமுகவின் நீண்ட நாளைய இடைவிடாத கோரிக்கைக்கு வெற்றி கிடைத்துள்ளது.

இந்தத் தீர்ப்பு, பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியர் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அதிக அளவு இடங்களைப் பெற வழி வகுத்துள்ளது. இந்த ஆணையை எதிர்த்து சிலர் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், மத்திய அரசு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று ஆணை பிறப்பித்துள்ளது. இது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தொடர் போராட்டத்திற்கு, தொடர் வலியுறுத்தலுக்குக் கிடைத்த வெற்றி.

கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் மத்திய அரசில் அங்கம் வகித்து, இதற்காக ஒரு குரல் கூட எழுப்பாத திமுக, இதற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத திமுக, வாய்மூடி மவுனியாக இருந்த திமுக,சுயநலத்திற்காக பொதுநலத்தைத் தாரை வார்த்த திமுக, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நீண்ட நாள் போராட்டத்தினால், வலியுறுத்தலினால் கிடைத்த வெற்றியை தன் வெற்றியாக பறைசாற்றிக் கொள்வது கேலிக்கூத்தாக உள்ளது.

மத்திய அரசு வேலை வாய்ப்பு – கல்வியில் 50% ஒதுக்கீடு நிறைவேற்றம், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10% இடஒதுக்கீட்டை ரத்து செய்ய அதிமுக குரல் கொடுக்கும் என்றும் தெரிவித்துள்ளனர். இதனிடையே, முதுநிலை மருத்துவ மேற்படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் உறுதி அளித்திருந்தது. உயர்சாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு நடப்பாண்டில் வழங்கப்படும் என்றும் இதற்கான விரிவான தீர்ப்பு மார்ச் 3வது வாரம் வழங்கப்பட உள்ளது என்றும் தெரிவித்திருந்தது.

இதனைத்தொடர்ந்து, PG மருத்துவப் படிப்புகளில் AIQக்கு மாநிலங்கள் வழங்கும் இடங்களில், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு, சமூகநீதியின்பால் பற்றுக்கொண்ட திமுகவுக்கும் தமிழ்நாட்டுக்கும் கிடைத்த மிக முக்கியமான வெற்றி என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு செல்லும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு அதிமுகவுக்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்