பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை – ஓபிஎஸ்!
மதுரை தமிழ்ச்சங்கம் சார்பில் நடந்த முத்தமிழ் விழாவில் பல பெருமைகளுடைய தமிழ் மொழியை அழியாமல் காப்பது நமது கடமை என துணை முதல்வர் கூறியுள்ளார்.
இன்று சென்னையில் பிரான்ஸ் ஓரயால் தமிழ் கலாச்சார மன்றம் மற்றும் மதுரை உலக தமிழ் சங்கம் சார்பில் இணையதளம் மூலமாக முத்தமிழ் விழா 2020 எனும் நிகழ்வு நடத்தப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கலந்து கொண்டார். இந்த விழாவில் அவருடன் பிரான்ஸ் தமிழ் கலாச்சார மன்ற தலைவராக இலங்கை வேந்தன், செயலாளர் கிருஷ்ணராஜ் மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தின் இயக்குனர் அன்புச்செழியன், பிரான்ஸ் இந்திய தூதரகத்தின் முதன்மைச் செயலாளர் இன்னாசி அருள் ஆனந்த் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பேசிய துணை முதல்வர் அவர்கள், உலக மொழிகளுக்கெல்லாம் உயர்ந்த மொழியாகவும் மூத்த மொழியாக இருக்க கூடிய தமிழ்மொழி பல பெருமைகளைக் கொண்டது. இத்தகைய பெருமை கொண்ட தமிழ் மொழியை புகழ்ந்து போற்ற வேண்டியது மட்டுமல்லாமல் அதை அழியாமல் காக்க வேண்டியதும் நமது கடமை என கூறியுள்ளார்.மேலும் இந்த தமிழ் மொழியை மென்மேலும் வளர்க்க வேண்டியது நமது மிகப்பெரிய கடமை எனக் கூறிய அவ,ர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய 10 கோடி, அமெரிக்க ஹீஸுடன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க ஒரு கோடி, மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் 40 கோடிக்கு புதுப்பிப்பு மற்றும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வு இருக்கைகள், பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக்கூடம், எம்ஜிஆர் பெயரில் நூல்கள் பாதுகாப்பு மையம், வயது முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு 3000 நிதி என எண்ணிலடங்கா திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தார். அது தற்போதும் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.