”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வென்றாலும் ஆச்சரியமில்லை என்று எம்.எல்.ஏ த.வேலுவின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார் .

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் – சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா – தருண் தன்ராஜ் ஆகியோரின் திருமணத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்தினார்.
இதையடுத்து மேடையில் பேசிய அவர், குழந்தைகளுக்கு அழகான தமிழ் பெயரை சூட்டுங்கள். அதுதான் எனது வேண்டுகோள் என கோரிக்கை வைத்தார். தொடர்ந்து பேசிய அவர், ”200 அல்ல.. 220 அல்ல.. 234 தொகுதிகளிலும் வெல்வோம். அதில் ஆச்சரியமில்லை.
எதிர்க்கட்சியினர் எத்தகைய கூட்டணி வைத்து வந்தாலும் ஒரு கை பார்ப்போம் என்ற முடிவில்தான் இருக்கிறோம். 2026ம் ஆண்டிலும் திராவிட மாடல் ஆட்சிதான் அமையும். மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, உலகத்துக்கே முன்மாதிரியான ஆட்சியை திமுக வழங்கி வருகிறது என்றார்
‘ஊர்ந்து’ என்ற வார்த்தையை கேட்டாலே அதிமுகவினருக்கு கோபம் வருகிறது என தெரிவித்தார். நேற்று பேரவையில் அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு ஊர்ந்து கொண்டிருந்தது என முதலவர் பேசியதற்கு அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்த திருமண விழாவில், திமுக எம்.பி. கனிமொழியும் பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசனும் மகிழ்வோடு நலம் விசாரித்துக் கொண்டனர்.