கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது மக்களிடையே எடுபடாது – மு.க.ஸ்டாலின்!
கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![DMK mk stalin](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/DMK-mk-stalin-.webp)
சென்னை : நெல்லை கங்கைகொண்டானில் டாடா குழும நிறுவனத்தின் சூரிய மின்கல உற்பத்தி ஆலையை திறந்து வைப்பதற்காக இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை தந்திருந்தார். வருகை தந்தவுடன் அவரை காண அந்த பகுதியில் மக்கள் கூடிய நிலையில் முதல்வருக்கு அமோக வரவேற்பு அளித்தனர். அதன்பிறகு, நெல்லையில் ரூ.66.04 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளை தொடங்கி முதல்வர் தொடங்கி வைத்தார்.
அதன்பிறகு, மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் கலந்து கொண்டு பேசிய அவர் ” ஆட்சியில் இருந்தாலும், இல்லையென்றாலும் தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களுக்காகவும் இந்த இயக்கம் செயல்படும் என கட்டி எழுப்பிய இயக்கம் தி.மு.க. எனவே, ஆட்சியில் நாங்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நிச்சியமாக மக்களுக்காகப் பாடுபடும் இயக்கம் திமுக எப்போதும் இருக்கும்.
சிலர் கட்சி தொடங்கியதும் முதலமைச்சர் ஆகவும் ஆட்சிக்கு வரவும் ஆசைப்படுகிறார்கள். நான் அவர்களுக்கு சொல்லிக்கொள்ள விரும்புவது புதிதாக கட்சி தொடங்கிய உடனே நான்தான் முதலமைச்சர் என கூறுவது எல்லாம் மக்களிடையே எடுபடாது. உண்மையில் மக்களுக்கு அது நன்றாகவே தெரியும். யார் மக்கள் பணியாற்றுவார்கள்? யார் மக்களுக்கு தொண்டாற்றுவார்கள் என்பது மக்களுக்கு தெரியும்” எனவும் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, டெல்லியில் இன்று முழங்கிய திமுகவின் குரல் நாடு முழுவதும் எதிரொலிக்கும் எனவும், நீட், சிஏஏ, என்.ஆர்.சி. வேளாண்மை சட்டங்கள் என ஒவ்வொரு போராட்டத்திற்கும் திமுக தலைமை தாங்கியுள்ளது எனவும் டெல்லியில் திமுக மாணவரணி சார்பில் போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.