ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு… மீண்டும் இ-பாஸ் கட்டாயம்.!
E Pass : ஊட்டி, கொடைக்கானல் செல்வோர் மே 7ஆம் தேதி முதல் வாகனங்களுக்கு இ-பாஸ் எடுத்து வர வேண்டியது கட்டாயம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை காலம் என்பதாலும் மலை பிரதேசங்களில் சுற்றுலா பயணிகளின் வரவு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் சுற்றுசூழலை பாதுகாக்க பல்வேறு மனுக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்களாக தாக்கல் செய்யப்பட்டன.
இந்த பொதுநல மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சதீஸ்குமார், பரத சக்கரவர்த்தி தலைமையிலான அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது. விசாரணையில், திண்டுக்கல் மற்றும் நீலகிரி மாவட்ட ஆட்சியர்கள் காணொளி மூலம் ஆஜராகினர். அப்போது ஊட்டிக்கு தற்போது தினமும் 1300 வேன்கள் உட்பட சுமார் 20 ஆயிரம் வாகனங்கள் வருகிறது என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
இதனை அடுத்து, உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு பிறப்பித்த இடைக்கால உத்தரவில், இவ்வாறான வாகன நெரிசல்கள் அதிகம் இருந்தால் அது சுற்றுசூழலுக்கு ஆபத்து என்றும், உள்ளூர் மக்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்படுவர் என்றும் கூறினர்.
பின்னர், IIT, IIM-இன் சுற்றுசூழல் அமைப்பு ஊட்டி, கொடைக்கானல் பற்றி சுற்றுசூழல் பாதுகாப்பு அறிக்கை தாக்கல் செய்யும் வரையில், இடைக்கால நடவடிக்கையாக, கொரோனா காலத்தில் பின்பற்றப்பட்ட இ-பாஸ் நடைமுறையை கொண்டு வரவேண்டும் என்றும், வரும் மே 7 முதல் ஜூன் 30 வரையில் இந்த இ-பாஸ் நடைமுறை அமலில் இருக்க வேண்டும் என்றும், இதற்கான செயல்திட்ட வழிமுறைகளை தமிழக அரசு விரைவாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றம் கூறியது.
அந்த இ-பாஸில், வாகன விவரம், வாகனத்தில் எத்தனை பேர் பயணிக்கிறார்கள், எத்தனை நாட்கள் தங்குவார்கள் உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிட வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இ-பாஸ் உள்ளூர் மக்களுக்கு பொருந்தாது என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.