புலன் விசாரணை செய்வது கடமை.. செந்தில் பாலாஜி வழக்கில் 2வது நாள் விசாரணை தொடங்கியது!
சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஆட்கொணர்வு மனு மீது 2வது நாள் விசாரணை தொடங்கியது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு நடைபெற்றது. அப்போது, செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், என்ஆர் இளங்கோ ஆஜராகி வாதம் முன்வைத்தனர்.
செந்தில் பாலாஜி தரப்பு வாதத்தில், குற்றம் மூலம் பெற்ற பணத்தை வைத்ததாகவோ, மறைத்ததாகவோ எந்த ஆதாரமும் இல்லை, குற்றம் செய்ததற்கான அனைத்து ஆதாரங்களும் இருந்தால் மட்டுமே கைது செய்ய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அமலாக்கத்துறை விசாரணை நடத்த மட்டுமே அதிகாரம் உண்டு. தவிர புலன் விசாரணை மேற்கொள்ள அதிகாரம் இல்லை என வாதம் வைக்கப்பட்டது.
கைதுக்கான காரணங்கள் குறித்த ஆவணத்தை பெற செந்தில்பாலாஜி மறுத்தது ஏன்? என நீதிபதி கேள்வி எழுப்பினார். அமலாக்கத்துறை சட்டத்தை மீறி இருந்தால், கூண்டில் ஏற்றி இழப்பீட்டை பெற்றுக் கொள்ளுங்கள் என தெரிவித்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா தரப்பு வாதம் முடிவடையாததை அடுத்து, வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி கைது தொடர்பாக, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது இரண்டாவது நாள் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு தொடங்கியது. அதன்படி, 3வது நீதிபதி சி.வி.கார்த்திகேயன் வாதங்களை கேட்டு வருகிறார். நேற்று செந்தில் பாலாஜி தரப்பு வாதம் நிறைவடைந்த நிலையில், இன்று அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா வாதங்களை வைத்து வருகிறார்.
தங்களிடம் உள்ள ஆதாரங்களை பட்டியலிடுகிறது அமலாக்கத்துறை. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின்படி புலன் விசாரணை செய்வது அமலாக்கத்துறையின் கடமை. காவலில் எடுத்து விசாரிக்க சட்டத்தில் அனுமதி வழங்காவிட்டாலும் புலன் விசாரணை செய்வது கடமை. மேலும், குற்றத்தை கண்டுபிடிக்க, சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்யப்பட்ட பணத்தை முடக்கம் செய்வது, சோதனை செய்வது, வழக்கு தாக்கல் செய்ய அதிகாரம் உள்ளது என அமலாக்கத்துறை தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது.