அனைத்து கல்லூரி மாணவர்களும் தடுப்பூசி செலுத்திக்கொள்வது கட்டாயம் – அமைச்சர் பொன்முடி
செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும்.
தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்றுப் பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ளது. அதன்படி, ஆசிரியர்கள் கண்டிப்பாக கடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அவர்கள், செப்டம்பர் 1-ஆம் தேதி தடுப்பூசி செலுத்திய பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மட்டுமே கல்லூரிக்கு வர வேண்டும் என்றும், தடுப்பூசி போடாதவர்கள் விரைந்து தடுப்பூசி போடுமாறும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு உயர்கல்வித்துறை உறுதுணையாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.