ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.., டிடிவி தினகரன் இரங்கல்..!
விவேக் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை மாரடைப்பு காரணமாக நடிகர் விவேக் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை காலமானார். நடிகர் விவேக்கின் மறைவை தொடர்ந்து பல அரசியல் தலைவர்களும், திரைப்பிரபலங்களும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விவேக் அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது மறைவு திரையுலகிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்திற்கும் பேரிழப்பாகும்.
அந்த அளவுக்கு சமூக அக்கறை கொண்ட சிந்தனையாளராகவும், செயற்பாட்டாளராகவும் விவேக் திகழ்ந்தார். ‘சனங்களின் கலைஞன்’ எனக் கொண்டாடப்படும் அவரது பெருமைகள் என்றைக்கும் நிலைத்து நிற்கும். விவேக் அவர்களின் மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் திரையுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.