பரந்தூர் ஓகே! அடுத்து வேங்கைவயல்? தவெக தலைவர் விஜயின் அதிரடி திட்டம்!
நேற்று முன்தினம் பரந்தூர் சென்றதை அடுத்து தவெக தலைவர் விஜய் வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு ஒரு சில மேடை நிகழ்வுகளில் கலந்து கொண்டதை அடுத்து முதல் முறையாக நேற்று முன்தினம் பரந்தூர் சென்று அங்குள்ள மக்களை நேரடியாக களத்தில் சந்தித்தார்.
பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 900 நாட்களை கடந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த 13 கிராம மக்களை மேல்பொடவூர் எனும் கிராமத்தில் உள்ள தனியார் மண்டப வளாகத்தில் தவெக தலைவர் விஜய் சந்தித்தார். திறந்த வெளி வாகனத்தில் பேசிய அவர், பரந்தூர் மக்களோடு துணை நிற்பதாகவும், இந்த இடத்தை தவிர்த்து வேறு இடத்தில் விமான நிலையம் அமைக்க வேண்டும் எனவும் கூறினார்.
தனது நேரடி கள கனவு அரசியல் பயணத்தை பரந்தூரில் இருந்து ஆரம்பித்ததாக கூறிய விஜய், அடுத்ததாக பல்வேறு ஊர்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என கூறப்பட்டு இருந்தது. தற்போது அதற்கேற்றாற் போல ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தவெக தலைவர் விஜய் அடுத்ததாக புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்கு செல்ல உள்ளார் என்றும் அங்கு பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
கடந்த 2 வருடங்களுக்கு முன்னதாக வேங்கை வயல் கிராமத்தில் மக்கள் பயன்படுத்திய குடிநீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பல்வேறு விசாரணை அமைப்புகள், பலகட்ட சோதனை நடத்தியும் இன்னும் குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.