முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்திக்கும் செந்தில் பாலாஜி.? அடுத்தடுத்த நகர்வுகள் என்ன.?
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இன்று மாலை அல்லது நாளை இரவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

சென்னை : சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத்துறையினரால் கடந்த 2023 ஜூன் மாதம் கைதாகியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு , உச்சநீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது. ரூ.25 லட்சத்திற்கு பிணை, ஆமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்து என பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
மேலும், செந்தில் பாலாஜி மீண்டும் தமிழ்நாடு அமைச்சராக நியமனம் செய்வபடுவதற்கு எந்தவித தடையும் விதிக்கப்படவில்லை என்று அவரது வழக்கறிஞர் இளங்கோ செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதனால், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறிய அமைச்சரவை மாற்றம் விரைவில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, செந்தில் பாலாஜி எப்போது சந்திக்க உள்ளார் என்ற பேச்சுக்கள் தற்போது எழத்தொடங்கி உள்ளன. என்றால், நாளை பிரதமர் மோடியை சந்திப்பதற்காக இன்று மாலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி புறப்படுகிறார் . அதற்குள் செந்தில் பாலாஜி புழல் சிறையில் இருந்து ரிலீஸ் செய்யப்பட்டால் இன்று முதல்வருடன் சந்திப்பு நடக்கும் என கூறப்படுகிறது.
அதாவது, உச்சநீதிமன்ற ஜாமீன் தீர்ப்பின் நகல், இன்று பிற்பகலுக்குள் சென்னை புழல் சிறைத்துறை அதிகாரிகளுக்கு வழங்ப்பட்டால் இன்று பிற்பகல் 3 அல்லது 3.30 மணியளவில் செந்தில் பாலாஜி ரிலீஸ் செய்யப்படுவார் என்றும், அதன் பின்னர் மாலை விமான நிலையத்தில் வைத்தோ அல்லது அதற்கு முன்னரோ முதலமைச்சரை செந்தில் பாலாஜி சந்திக்க வாய்ப்புள்ளது எனக் கூறப்படுகிறது.
அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று மாலை புழல் சிறையில் இருந்து வெளியில் வந்தால் நாளை இரவு முதலமைச்சர் டெல்லியில் இருந்து திரும்பி வந்த பிறகு தான் செந்தில் பாலாஜி சந்திக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்படுகிறது. மேலும், சிறையில் இருந்து வந்த பிறகு திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டியுள்ளதால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னையிலேயே தங்கி இருப்பார் என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன.