நாம் ஓட்டுப்போட்டு என்னவாகப்போகுது.? மாறும் நகர்ப்புற தேர்தல் மனநிலை.!
Election2024 : தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் இருக்கும் மாவட்டங்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே பெருநகர பகுதி வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது.
மக்களவை முதற்கட்ட தேர்தல் 21 மாநிலங்களில் 102 தொகுதிகளில் நேற்று காலை 7 மணிக்கு தொடங்கி 6 மணிவரை என்று அறிவித்து இருந்தாலும், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் பல்வேறு இடங்களில் 6 மணிக்குள் வாக்கு சாவடிக்குள் வந்தவர்களுக்கு டோக்கன் கொடுக்கப்பட்டு இரவு 8 மணியை கடந்தும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதனால், தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள், தபால் வாக்குகள் சேர்த்து துல்லியமான வாக்கு சதவீத விவரங்கள் வெளியாகாமல் இருந்தது. தமிழகத்தில் இதுவரை வெளியான தகவலின்படி 69.46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக, தருமபுரி மக்களவைத் தொகுதியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக தலைநகரான சென்னை மண்டலத்தில் மத்திய சென்னை, வடசென்னை, தென் சென்னை சேர்த்து சராசரி வாக்கு சதவீதம் 56.10 ஆக குறைந்து உள்ளது.
தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வாக்கு சதவீதம் அதிகரித்து காணப்படுவதும், தமிழக தலைநகர் சென்னை, மதுரை , கோவை போன்ற பெரு நகரங்களில் வாக்கு சதவீதம் குறைந்து காணப்படுவதும் ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்கதையாக மாறிவருகிறது.
மத்திய சென்னையில், கடந்த 2019இல் 58.95 % பதிவாகியது, இந்த முறை 53.91 % வாக்குகளே பதிவாகியது. தென் சென்னையில் 57.05% வாக்குகள் பதிவாகியது. இம்முறை 54.27% வாக்குகளே பதிவாகியது. வடசென்னையில் கடந்த முறை 64.23% வாக்குகள் பதிவாகியது. இம்முறை 60.13% வாக்குகளே பதிவாகியுள்ளது.
மதுரையில் கடந்த 2019இல் 66.02% வாக்குகளும், இம்முறை 61.92 சதவீத வாக்குகளும், கோவையில் கடந்த முறை 63.86 சதவீத வாக்குக்களும், இந்த முறை 64.81 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
இப்படியாக, பெருநகரங்களில் குறைவாகும் வாக்குபதிவு பற்றி சென்னை மண்டல தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், நகர்ப்புற சுணக்கமே வாக்குப்பதிவு பெருநகர பகுதியில் குறைய காரணம் என கூறினார். நாம் வாக்களித்து என்னவாகிவிடப்போகிறது என்ற மனநிலையில் பலர் வாக்களிக்க வராததாகவும் குறிப்பிட்டார்.
அனைவரும் வாக்களிக்க வேண்டும் என குறிப்பிட்டு 47 வகைகளில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது என்றும், அப்படி செய்ததன் காரணமாகவே இந்த அளவுக்கேனும் வாக்குகள் பதிவாகியது என்றும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இப்படி பெரு நகரங்களில் வாக்கு சதவீதம் குறைவதற்கு காரணம், அவர்களின் இருப்பிடம், வேலை நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்கு இடம்பெயரும் சூழ்நிலை நிலவுகிறது. அதன் காரணமாக தங்கள் வாக்கு எங்கு இருக்கிறது என்று பலருக்கு தெரிவதில்லை. இதுகுறித்த தேடுதல் ஆர்வமும் பெருநகர வாழ் வாக்காளர்கள் மத்தியில் போதிய அளவு என்பதும் பரவலான குற்றச்சாட்டாக உள்ளது. அடுத்து வெயிலின் தாக்கம், அதிக தூரம் சென்று வாக்குசாவடியை தேடி வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையும் பெரு நகரங்களில் வாக்கு சதவீதம் குறைய ஓர் காரணமாக அமைகிறது என்றும் கூறப்படுகிறது.