அனைத்துக்கட்சி கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்.! வரிசையாக அறிவித்த தமிழக முதல்வர்.!
சென்னை: காவிரியில் இருந்து தமிழகத்திற்கு இம்மாதம் முழுவதும் (ஜூலை) தினமும் 1 டிஎம்சி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று வாரியம் கடந்த வாரம் உத்தரவிட்டது. ஆனால் கர்நாடக அரசு அந்த உத்தரவை ஏற்க மறுத்து 8,000 கனஅடி தண்ணீர் தான் திறந்து விட முடியும் என கூறியது.
கர்நாடக அரசின் இந்த முடிவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்து இன்று (ஜூலை 16) அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டினார். தலைமை செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். அமைச்சர் துரைமுருகன், சட்ட வல்லுநர்கள், அதிமுக, பாஜக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இந்த அனைத்துக்கட்சி கூட்டம் நிறைவடைந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், இந்த கூட்டத்தில் நிறைவேற்றம் செய்யப்பட்ட தீர்மானங்கள் குறித்து விளக்கம் அளித்தார். அதில், அனைத்துக்கட்சி கூட்டத்தில் பங்கேற்று தங்கள் கருத்துக்களை கூறிய உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
முதல்வர் மேலும் பேசுகையில், காவிரி ஒழுங்காற்று வாரியம் பிறப்பித்த உத்தரவை ஏற்காத கர்நாடக அரசுக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்றார்.
அடுத்து, காவிரி விவகாரம் தொடர்பாக, காவிரி ஒழுங்காற்று வாரியம் அளித்த உத்தரவை கர்நாடக அரசு பின்பற்ற வேண்டும் என காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என பரிந்துரை செய்யப்படும் என்றும்,
காவிரி விவகாரம் தொடர்பாக தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் செல்வதற்கு தீர்மானம் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அனைத்துக்கட்சி கூட்ட இறுதி நிகழ்வில் குறிப்பிட்டார்.