த.வெ.க முதல் மாநாட்டிற்கு அனுமதி கிடைக்குமா.? வந்தது புதிய சிக்கல்.!
த.வெ.க மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், 4 நாட்கள் ஆகியும் இன்னும் அனுமதி அளிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை : நடிகர் விஜய் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியின் முதல் மாநாடு, வரும் அக்டோபர் மாதம் 27ஆம் தேதி நடைபெரும் என அறிவிக்கப்பட்டுவிட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் இந்த மாநாடு பிரமாண்டமாக நடைபெற உள்ளது.
இதற்கு முன்னர் இம்மாத தொடக்கத்தில் இந்த மாநாடு நடைபெறும் என கூறப்பட்டு வந்தது. அதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில். மாநாட்டிற்கான பணிகள் முழுதாக நிறைவடையாத காரணத்தால் அந்த தேதிகள் கைவிடப்பட்டு பின்னர் அக்டோபர் 27 என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
அதற்கான அறிவிப்பையும் த.வெ.க கட்சித் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவித்து அதற்கான அழைப்பையும் விடுத்தார். மாவட்டந்தோறும், த.வெ.க கட்சியினர் மாநாட்டிற்கு விறுவிறுப்பாக தயாராகி வருகின்றனர். இதற்கான போஸ்டர்கள், விளம்பரங்கள் என கட்சிப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது.
இப்படியான சூழலில் , தற்போது வரையில் விழுப்புரம் காவல்துறை சார்பில் த.வெ.க மாநாட்டிற்கு இன்னும் அனுமதி வழங்கப்படாமல் இருந்து வருகிறது என்ற தகவல் வெளியாகி த.வெ.க கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அக்கட்சி சார்பில் காவல்துறை அனுமதி கேட்டு 4 நாட்கள் ஆகிவிட்டதாம். இன்னும் அதற்கான இசைவு பெறப்படவில்லை.
த.வெ.க மாநாட்டிற்கு அனுமதி மற்றும் பாதுகாப்புக்கோரி மனு அளித்து 4 நாட்களாகியும், இதுவரை விழுப்புரம் மாவட்ட காவல்துறை எந்த பதிலும் தெரிவிக்கவில்லையாம். ஏனென்றால், அடுத்த சில நாட்களில் அதாவது அக்டோபர் 30இல் தேவர் ஜெயந்தி விழா ராமநாதபுரத்தில் நடைபெற உள்ளது. அதற்கு 3 நாட்கள் முன்னதாக ஏராளமான காவல்துறையினர் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் .
இதனால், விஜய் மாநாட்டிற்கு பாதுகாப்பு பணி மேற்கொள்வதில் காவல்துறை தரப்பில்புதிய சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் விரைவில் சீர் செய்யப்பட்டு காவல்துறை அனுமதி அளித்தால் மட்டுமே குறிப்பிட்ட தேதியில் மாநாடு நடைபெறும் என அரசியல் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
இப்படியான சூழலில் நாளை (செப்டம்பர் 26) த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் தவெக நிர்வாகிகள் கலந்துகொள்ளும் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இதில் மாநாடு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.