தமிழக மீனவர்களுக்கு நேவிகேஷன் செல்போன் செயலி விரைவில் வழங்கப்படும்!
இஸ்ரோ இயக்குனர் சிவன் இயற்கை சீற்றங்களின் போது மீனவர்கள் திசை மற்றும் இடம் அறிந்து கரை திரும்ப உதவும் செல்போன் செயலி விரைவில் தமிழக மீனவர்களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
திருப்பதி ஏழுமலையான் கோயில் சென்ற அவர் தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய சிவன், இஸ்ரோ இயக்குனராக பதவியேற்ற பின்னர் பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., ஜி சாட் 11 சந்திரயான், போன்ற பெரிய பெரிய திட்டங்கள் காத்திருப்பதால் சுவாமி வழிபாடு நடத்தியதாக தெரிவித்தார். மீனவர்களுக்காக நேவிகேசன் மொபைல் ஆப் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக மீனவர்களுக்கு வெகு விரைவில் அவை வழங்கப்படும் என்றும் சிவன் கூறினார்.
ராக்கெட் மற்றும் செயற்கைகோள் உதிரி பாகங்களை தயாரிக்கும் பணிகள் தனியார் ஆலைகளுக்கு வழங்கப்படவுள்ளதால் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்றும் அவர் தெரிவித்தார். தியேட்டர்களில் சினிமா திரையிடப்படுவதைப் போல் பள்ளி மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் செயற்கைக்கோள் உதவியுடன் பாடம் நடத்தும் திட்டமும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.