குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது – நயினார் நாகேந்திரன்
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்று நயினார் நாகேந்திரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசிய தமிழக முதல்வர் அவர்கள், சட்டப்படியான சமத்துவம் மற்றும் சட்டப்படியான பாதுகாப்பை எந்த அரசும் மறுக்க முடியாது என்றும், 1956 குடியுரிமை சட்டத்தின் அடிப்படையில், ஒரு நபர் குடியுரிமை பெற மதம் என்பது அடிப்படையாக இல்லை என்றும், குடியுரிமை திருத்தச் சட்டம் மதசார்பின்மை கோட்பாடு, மத நல்லிணக்கத்திற்கும் உகந்ததாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சட்டப்பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு செய்துள்ளது. அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நயினார் நாகேந்திரன் அவர்கள், தமிழக முதல்வர் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்காத நிலையில், சட்டப்பேரவையில் மதநல்லிணக்கத்தை பற்றி பேசுவது வருந்தத்தக்கது என்றும, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்து நாங்கள் சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இந்திய குடியுரிமை திருத்த சட்டம் மூலம் இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், அரசியலமைப்பு சட்டப்படி மத்திய அரசுக்கு மக்கள் பாதுகாப்புக்காக சட்டம் கொண்டுவருவதற்கு இடம் இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.