அனுமதி பெறாமல் செயல்பட்ட ஈஷா யோகா மையம்.? சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்.!
கோவை ஈஷா யோகா மையம் கல்வி நோக்கத்திற்காக கட்டப்பட்டுள்ளதால் சுற்றுசூழல் அனுமதி பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் சுற்றுசூழல் அனுமதி பெறாமல் கட்டடம் கட்டி இருப்பதாக தமிழக அரசு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈஷா யோகா மையம் முறையீடு செய்தது
இந்த வழக்கு விசாரணையானது, நீதிபதி டி.ராஜா தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருந்தது.
ஈஷா யோகா மையமானது, கல்வி நோக்கத்தில் கட்டடங்களை கட்டியுள்ளதால், அதில் மாணவர்கள் தங்கும் விடுதிகள் போன்ற இடங்கள் இருப்பதால் சுற்றுசூழல் அனுமதி பெற வேண்டியதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து, ‘ நீங்களே சட்டங்களை போட்டுவிட்டு, அதற்கு நீங்களே விலக்கு அளிப்பது ஏன்.?’ எனவும், இதுகுறித்து நாளை விளக்கம் அளிக்கவேண்டும் எனவும் மத்திய அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம்.