விக்கிரவாண்டி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் போட்டியா? போட்டியிட விருப்பமனு தாக்கல்
உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுகவிற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும்ர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.கடந்த சில மாதங்களாக அவரது அரசியல் செயல்பாடு அதிகமாகவே இருந்து வந்தது.
இதனையடுத்து திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார். திமுக இளைஞரணிச் செயலாளராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார்.37 ஆண்டுகாலமாக மு.க.ஸ்டாலின் வகித்த பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.பின்னர் இளைஞரணியில் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்.உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தியும் வருகிறார்.
இந்த வேளையில் தான் தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளில் அடுத்த மாதம் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.மேலும் செப்டம்பர் 23-ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் தெரிவித்தது. இதனால் தமிழகத்தின் பிரதான கட்சிகள் போட்டியிட விரும்புவோரை விருப்பமனு தாக்கல் செய்ய அறிவுறுத்தியது.அந்த வகையில் தான் திமுகவில் விருப்பமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் திமுக இளைஞரணிச் செயலாளராக உள்ள உதயநிதி ஸ்டாலின் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட திமுக எம்பி கவுதம சிகாமணி விருப்ப மனு தாக்கல் செய்திருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மகனான கவுதம சிகாமணி தனது சொந்த செலவில் உதயநிதி ஸ்டாலின் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளார்