திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதா? – ஆட்சியர் சிவராசு
திருச்சி மாவட்டம் ஆரஞ்சு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக ஆட்சியர் சிவராசு பேட்டி.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மிக தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிகளைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருச்சி மாவட்ட ஆட்சியர் செய்தியாளருக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், திருச்சியில் மொத்தம் 51 பேர் இந்த வைரஸ் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில், 46 பேர் இந்த வைரஸ் நோயில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்றும், தற்போது 5 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 22-ம் தேதிக்கு பின் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்றும், வெளி மாநிலங்களில் அல்லது மாவட்டங்களில் இருந்து வருபவர்கள் தீவிர பரிசோதனைக்குட்படுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
மேலும், கொரோனா தொற்று ஏற்பட்டு நகர்ப்புற பகுதிகளில் நாளையுடன் 14 நாட்கள் நிறைவடைந்துள்ளதாகவும், கிராமப்புற பகுதிகளில் மே -7ம் தேதி 14 நாட்கள் நிறைவடைவதாகவும் கூறியுள்ளார். ஆரஞ்சு மண்டலமாக திருச்சி மாற்றப்படுவது குறித்து, தமிழக முதல்வர் ஆலோசனை செய்து கூறுவார் என ஆட்சியர் சிவராசு கூறியுள்ளார்.