இதுதான் திமுக தலைமையிலான அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் செய்த சாதனையா? – சசிகலா

Sasikala

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மது விலக்கை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சசிகலா அறிக்கை. 

தஞ்சாவூரில் மதுக்குடிப்பகத்தில் மது குடித்த இருவர் உயிரிழந்துள்ளனர்.  அவர்கள் குடித்த மதுவில் சயனைடு நஞ்சு கலந்திருந்தது தான் உயிரிழப்புக்குக்  காரணம் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘ திமுக தலைமையிலான அரசு தனது இரண்டு ஆண்டு கால ஆட்சியில் ஏதோ சாதித்துவிட்டதாக சொல்லி எல்லா இடங்களிலும் திமுகவினர் மேடை போட்டு பேசுகின்றனர். ஆனால் இவர்கள் செய்த சாதனைகள் என்னவென்று ஒவ்வொன்றாக நாள்தோறும் வெளிவந்து பொதுமக்களை பேரதிர்ச்சிக்குள்ளாக்கி வருவது மிகவும் வேதனை அளிக்கிறது.
சமீபத்தில் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் விஷச்சாராயம் குடித்த 24 நபர்கள் உயிரிழந்த சம்பவத்தின் மூலம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு எவ்வாறு பாதுகாக்கப்படுகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிந்துகொண்டனர்.

அதைத்தொடர்ந்து தற்போது தஞ்சாவூர் மாவட்டம் கீழஅலங்கம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு எதிரே உள்ள அரசிடமிருந்து உரிமம் பெற்று தனியாரால் நடத்தப்படும் பாரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இந்த குறிப்பிட்ட பாரில் காலை 11 மணியளவில் அங்கு விற்கப்பட்ட மதுவை வாங்கிக் குடித்த இருவர் உயிரிழந்திருப்பது மிகவும் வருத்தமளிக்கிறது.

அதாவது, தமிழகம் முழுவதும் அரசு உரிமம் பெற்ற டாஸ்மாக் கடைகள் காலை 12 மணிக்கு திறக்கப்படும் போது அதற்கு முன்பாகவே, அதிகாலையிலேயே பார்களில் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வருகின்றன. மேலும், தற்போது தமிழகத்தில் செயல்படுகிற பார்களில் மூன்றில் இரண்டு பங்கு உரிமம் பெறாமல் செயல்பட்டு கொண்டிருப்பதாகவும் அதிர்ச்சியளிக்கின்ற வகையில் தகவல்கள் வருகின்றன. அதேபோன்று, இன்றைய ஆட்சியில் டாஸ்மாக் இல்லாமல் தனியாருக்கு சொந்தமான பிற இடங்களிலும், 24 மணிநேரமும் தங்குதடையின்றி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்கள் சொல்லி வேதனைப்படுகிறார்கள்.

திமுக தலைமையிலான அரசு தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைத்து பூரண மது விலக்கை கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தமிழகத்தில் சட்ட விரோத செயல்கள் நடைபெறாத வகையில் சட்டம் ஒழுங்கை பேணிப் பாதுகாத்திட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்