தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இருக்கிறதா ? அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம்
சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.சீனா மட்டும் அல்லாமல் உலகின் பல நாடுகளுக்கு இந்த வைரஸ் பரவி வருகிறது.இதனால் உலகின் பிற நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் நாளுக்கு நாள் உயிரிழப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.தற்போது வரை கொரோனா வைரஸ் தாக்கத்தால் 425 பேர் உயிரிழந்த்துள்ளனர். கொரோனா வைரசால் 18000-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த வைரஸ் இதுவரை இந்தியாவில் கேரள மாநிலத்தில் 3 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த வைரஸ் குறித்த விழிப்புணர்வை மத்திய அரசுகளும்,மாநில அரசுகளும் மேற்கொண்டு வருகிறது.குறிப்பாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.வைரஸ் அறிகுறிகள் குறித்து வரும் நபர்களுக்கு சோதனை மேற்கொள்ள சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது.இதற்கு இடையில் இன்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் இதுவரை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை. கேரள- தமிழக எல்லையில் முழுமையான கண்காணிப்பு பணியில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.கொரோனா வைரஸ் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய ஆலோசனைகளின்படி செயல்பட்டு வருகிறோம்.இந்தியாவில் புனேவிற்கு அடுத்தப்படியாக தமிழ்நாட்டில்தான் கொரோனா வைரஸ் கண்டறியும் ஆய்வு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.