தலைசிறந்த தலைவராக இபிஎஸ் திகழ காரணம், கழகப் பணியா? மக்கள் பணியா? மாநாட்டில் சிறப்பு பட்டிமன்றம்.!
மதுரை வலையங்குளத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக பொன்விழா எழுச்சி மாநாடு பிரமாண்டமாக தொடங்கியுள்ளது. இந்த மாநாட்டை பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 51 அடி உயர கொடிக்கம்பத்தில் கட்சியின் கொடியை ஏற்றித் தொடங்கி வைத்தார்.
அவருக்கு ஹெலிகாப்டரில் இருந்து ஒரு டன் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மாநாட்டில் தொண்டர்கள் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா போல் வேடமிட்டு கலந்து கொண்டனர். இதில் கலை நிகழ்ச்சிகளுக்காக 65 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த மேடையில் நகைச்சுவைக் கலைஞர்களின் பேச்சு உட்பட பல கலைநிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன்படி, தற்பொழுது மதுரை அதிமுக மாநாட்டில் முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் தலைமையில் “தலைசிறந்த தலைவராக எடப்பாடி பழனிசாமி திகழ்ந்திட காரணம், கண் துஞ்சா கழகப் பணியா? மனம் துஞ்சா மக்கள் பணியா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்துவருகிறது.
மேலும், பிரபல தொலைக்காட்சி புகழ் ரோபோ சங்கர், காமெடி நடிகர் ராமர், செந்தில், லட்சுமி உள்ளிட்டோர் அதிமுகவின் வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாட்டின் கலைநிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். மாநாட்டில் எம்.ஜி.ஆரின் குரலில் நடிகர் ரோபோ சங்கர் பேசி மாநாட்டில் இருந்தவர்கள் அனைவரையும் நகைச்சுவை செய்து சிரிக்க வைத்தார்.