பாஜக கூட்டணிக்கு தவம் கிடக்கிறதா? அண்ணாமலை கருத்துக்கு இபிஎஸ் சொன்ன பதில்!
6 மாதங்களுக்கு பிறகு கூட்டணி குறித்து பேசப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை : 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்போகிறது என்ற கேள்விகளும் எழும்பத்தொடங்கியுள்ளது. அதிலும் முக்கியமாக பெரிய அளவில் பேசப்பட்டு வருவது என்றால் பாஜக – அதிமுகவுடன் கூட்டணி வைக்க வாய்ப்புகள் இருப்பதாக இருக்கும் தகவல் தான். இது குறித்து இரண்டு கட்சியை சேர்ந்த தலைவர்கள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும் தகவல்கள் தீயாக பரவி கொண்டு இருக்கிறது.
இந்த சூழலில், நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூட்டணி பற்றி பேசினார். இது குறித்து பேசிய அவர் “பாஜக கட்சி..நோட்டா கட்சி..பாஜக கூட்டணியால் தேர்தலில் தோல்வி அடைந்தோம் என்று பேசியவர்கள் கூட இன்று பாஜக கூட்டணி வேண்டும் என தவம் கிடக்கிறார்கள். இதனை நான் இந்த நேரத்தில் சொல்லிக்கொள்ள மிகவும் பெருமைப்படுகிறேன். சரியான நேரத்தில் நிச்சயமாக நாங்கள் கூட்டணி குறித்து பேசுவோம்” எனவும் அண்ணாமலை பேசியிருந்தார்.
இதனையடுத்து அண்ணாமலை அதிமுக மறைமுகமாக பேசுகிறாறோ என்கிற கேள்வியும்..யாரை சொல்கிறார் என்கிற கேள்வியும் சமூக வலைத்தளங்களில் எழுந்தது. இதற்கு ஏற்கனவே, அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது ” அண்ணாமலை எங்களை சொல்லவில்லை..எங்களுடைய எதிரி என்றால் அது திமுக மட்டும் தான். மற்றபடி நாங்கள் கூட்டணிக்காக தவம் கிடைக்கவில்லை” என பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து தற்போது கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தபோது அண்ணாமலை பேசியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த அவர் ” அண்ணாமலை அப்படி பேசும்போது எங்களுடைய அதிமுகவை குறிப்பிட்டாரா? தவறா பேசாதீங்க..தயவு செஞ்சி தவறா பேசாதீங்க…அதிமுக தவம் கிடக்கிறது என அவர் எங்கும் சொல்லவில்லை.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கூட்டணி குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கும் பதில் கூறிய எடப்பாடி பழனிசாமி ” நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்..கூட்டணி குறித்து இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு தான் பேசப்படும்..இதனை தெளிவுபடுத்தி பேசிவிட்டேன் இது தான் செய்தி” எனவும் பதில் அளித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி சென்றார்.