தமிழ்நாடு பெயர் இல்லாதது ஒரு பிரச்சனையா.? அன்புமணி ராமதாஸ் கடும் விமர்சனம்.!

PMK Leader Anbumani Ramadoss

கோவை : அண்மையில் நாடாளுமன்றத்தில் நடப்பாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது . இதில், பாஜக கூட்டணி கட்சிகள் ஆளும் மாநிலங்களான பீகார் மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பட்ஜெட்டில், தமிழ்நாடு, கேரளா, டெல்லி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு கூடுதல் நிதி, சிறப்பு திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது எதிர்க்கட்சிகள் மத்தியில் விமர்சனங்களை பெற்றது.

மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் இல்லை என இன்று திமுக தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. அதே போல மற்ற கட்சிகளும் அடுத்தடுத்து ஆர்ப்பாட்டங்களை அறிவித்துள்ளன. இந்நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், பட்ஜெட்டில் போதிய நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார்.

மேலும் அவர் பேசுகையில், 48 லட்சம் கோடி ரூபாய்க்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு இருக்காதா என்ன.? இதுவரை முன்னர் காங்கிரஸ் தாக்கல் செய்த எல்லா பட்ஜெட்ட்டில் எல்லா மாநிலங்கள் பெயரும் சொல்லி இருக்காங்களா.? தமிழகத்திற்கான திட்டங்கள் வரும்.

தமிழகத்திற்கு கடந்தாண்டை விட கூடுதல் நிதிதான் கொடுத்துள்ளார்கள். இந்தாண்டு ரயில்வேக்கு 6,500 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளர்கள். கடந்தாண்டு, 6,300 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு ஒதுக்கினார்கள். தற்போது கூடுதலாக தான் கொடுத்துள்ளார்கள்.

வெள்ளம் வரும் போது மத்திய அரசு நிதி கொடுக்கணும். அதே நேரம், தமிழக அரசு இந்தாண்டு 3.5 லட்சம் கோடிக்கு பட்ஜெட் ஒதுக்கினார்கள். அதில் 1000 கோடி ரூபாய் வெள்ளத்திற்கு ஒதுக்கீடு செய்ய முடியாதா.? வெள்ளம், வறட்சிக்கு முன்னதாகவே நிதி ஒதுக்க மாட்டார்களா.? அப்படி செய்வது தான் உண்மையான திட்டமிடுதல் என்று மாநில அரசின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்து பேசினார்.

இருந்தும் பத்திரிகையாளர்கள் தமிழகத்திற்கு சிறப்பு திட்டங்கள் குறிப்பிடப்படவில்லை. ஆனால், பீகார், ஆந்திராவுக்கு அதிக திட்டங்கள் குறிப்பிடப்பட்டன என கேள்வி கேட்டனர். அப்போது அன்புமணி ராமதாஸ் பேசுகையில், பட்ஜெட்டில் தமிழ்நாடு பெயர் மட்டுமல்ல கேரளா, ஹிமாச்சல் பிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் பெயர்கள் கூட தான் வரவில்லை. தமிழ்நாட்டின் பெயர் வரவில்லை என்பதெல்லாம் ஒரு பிரச்சனையா.?

பெயர் வருவது முக்கியமல்ல, மாநிலத்திற்கு நிதி, திட்டம் வருவது தான் முக்கியம். எல்லா மாநிலத்தின் பெயரும் சொல்லி திட்டங்களை குறிப்பிட முடியாது. பட்ஜெட் வாசிப்பது 1.5 மணி நேரம் தான் இருக்கிறது. ஆந்திராவை விட தமிழகத்திற்கு அதிக நிதி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று தான் சட்ட விதியே உள்ளது என்று  அன்புமணி ராமதாஸ் கோவை செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்