11-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்தா?- பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை!
11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை.
மத்திய அரசு தேசிய புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தினாலும், அதனை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்து, தமிழகத்திற்கென தனி கல்வி கொள்கையை உருவாக்குவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, தனி கல்வி கொள்கையை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவானது தொடர்ந்து பல்வேறு அதிகாரிகளிடம் கருத்து கேட்டு வருகிறது.
அந்தவகையில், இன்று அண்ணா பல்கலைக்கழத்தில் உள்ள வளாகத்தில் மாநில கல்விக்கொள்கை உருவாக்க கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்வது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை தீவிர பரிசீலனை செய்து வருகிறது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
11-ஆம் பாடத்திட்டத்திற்கு பள்ளிகள் உரிய முக்கியத்துவம் தருவதில்லை என்றும் கூறினார். இந்த கூட்டத்தில் பேசிய கல்வித்துறை அதிகாரிகள், யானை பசிக்கு சோளப்பொரி கதையாக பள்ளி கல்வி துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சிக்கு தன்னாட்சி அதிகாரம் இருப்பது போல் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தன்னாட்சி அதிகாரம் தேவை என்றுள்ளனர்.
நீட் தேர்வை வெறும் 10,000 மாணவர்கள் எழுதுகிறார்கள். இவர்களுக்காக 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு 10 ஆயிரம் மாணவர்களுக்கு ஏற்றார்போல் பாடப்புத்தகம் எழுத வேண்டியிருக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் 13,000 ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்ப முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.