“தம்பி வேற., கொள்கை வேற., எதிரி எதிரிதான்.!” சீமான் ஆவேசம்.!
அண்ணன் - தம்பி உறவு வேறு. கொள்கை வேறு., கொள்கை எதிரி என்றால் எதிரி தான் அதில் மாற்றுக்கருத்து இல்லை என ஆவேசமாக பேட்டியளித்தார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சென்னை : நேற்று சென்னையில் நடந்த நாம் தமிழர் கட்சி நிகழ்வில் பேசிய சீமான், தவெக தலைவர் விஜய் மாநாட்டில் பேசிய கருத்துக்கள் குறித்து கடுமையாக விமர்சித்தார். தேசியமும் திராவிடமும் ஒன்றா என்று கடுமையாக கருத்துக்களை முன்வைத்தார்.
தற்போது சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மீண்டும் விஜய் பேசிய கருத்துக்கள் குறித்து தனது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதில், ” பாலகன் பாலச்சந்திரன் (விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மகன் ) மீது 5 குண்டுகள் பாய்ந்து அவன் மரணித்த போது பதறியது தமிழ் தேசியம். அப்போது பதவியேற்றது திராவிடம். இரண்டும் ஒன்றா? பெண்ணியம் பேசும் திராவிடம். பெண்ணிய உரிமையை கொடுக்கும் தமிழ் தேசியம். இரண்டும் ஒன்றா? இரண்டும் எப்படி சமமாகும்?
மொழிக் கொள்கை எப்படி இரு மொழி கொள்கையாகும். எங்களுக்கு மொழி தாய்மொழி தான். தமிழ் பயிற்சி மொழி, ஆங்கிலம் கட்டாய பாட மொழி. கொள்கை ரீதியாக எப்படி இருமொழி இருக்க முடியும்.? விருப்பப்பட்டால் இந்தி உட்பட எதை வேண்டுமானாலும் நாங்கள் படிப்போம். மும்மொழிக் கொள்கை என்பது மோசடி கொள்கை . இருமொழி கொள்கை என்பது ஏமாற்றுக் கொள்கை.
மதச்சார்பற்ற சமூக நீதி என்கிறார். அப்படி என்றால் பொருளாதார ரீதியாக பின்தங்கியவர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு, அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு என்பதில் எதை நீங்கள் ஆதரிக்கிறீர்கள்? எதிர்க்கிறீர்கள்? திமுகவும் ரெம்ப நாளாக சமூக நீதிப் பற்றி பேசிக்கொண்டு தான் இருக்கிறது. பெண்ணியம் பற்றியும் பேசிக்கொண்டே தான் இருக்கிறது. ஆணும் பெண்ணும் சமம் என்பது தமிழ் தேசியம். திமுக அமைச்சரவையில் எத்தனை பெண் அமைச்சர்கள் இருக்கிறார்கள்?
மதுக்கடைகளை மூடச் சொல்வது தமிழ் தேசியம். மதுக் கடைகளை திறக்க சொல்வது திராவிடம். வில்லனம் கதாநாயகனும் எப்படி ஒன்றாக இருக்க முடியும்? விஜய் தம்பிதான். ஆனால், அண்ணன் – தம்பி உறவு என்பது வேறு. கொள்கை என்பது வேறு. கொள்கை ரீதியில் எதிரி என்றால் எதிரி தான்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற நமது மூதாதையர்கள் கூறுகிறார்கள். அதன்பிறகு, பிறப்பால் அனைவரும் சமமில்லை, சாதி என்று இருக்கிறது என வர்ணாசிரமம் கொள்கைப்படி சாஸ்திரம் கூறுகிறது என்று கூறினார்கள். அப்படி எதுவும் இல்லை என்று கூறும்போது, கடவுள் தான் இதனை கூறினார் என்றார்கள். அப்படி பார்த்தால் மெயின் வில்லன் கடவுள் தான். இப்படித்தான் கடவுள் இல்லை எனும் முடிவுக்கு வருகிறார்கள். கடவுள் மறுப்பு என்பதும் இதில் தான் வருகிறது. நமக்கு எதிரி கடவுள் என்றால் கடவுளையும் எதிர்ப்போம். தமிழ் தேசிய உறவு என்பது இலட்சிய உறவு. எப்போதும் கொள்கை உறவு தான் மேலானது.
பாஜக, திமுக எங்களுக்குள் (தவெக – நாதக ) பொது எதிரி என்றால், அப்போது காங்கிரஸ், அதிமுக எல்லாம் நல்ல கட்சியா? 50 ஆண்டுகாலம் இந்தியாவை ஆண்ட கட்சி காங்கிரஸ், ஜிஎஸ்டி, நீட், NIA இதையெல்லாம் கொண்டு வந்தது காங்கிரஸ். எங்கள் ஈழத் தமிழர்களை அமைதிப்படை அனுப்பி கொன்றது காங்கிரஸ். கட்சத்தீவை கொடுத்தது காங்கிரஸ். பாபர் மசூதியை ஆர்எஸ்எஸ் இடிக்கும். இடிக்க அனுமதி கொடுக்கும் காங்கிரஸ். பிஜேபி கழுத்தை நெறித்துக் கொள்வான் என்றால், காங்கிரஸ் இடுப்பில் குத்தி குத்தி கொள்வான். இரண்டு பேரும் கொள்வார்கள். அதேபோல ஊழல் கட்சி என்றால் அதில் அதிமுகவுக்கு பங்கு இல்லையா? அவர்கள் கட்சித் தலைவியே ஊழல் வழக்கில் சிறைக்கு சென்றவர் தானே ” என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் பேசியுள்ளார்.