“ரகுபதி சட்டத்துறை அமைச்சரா? பேட்டை ரவுடியா? ” அண்ணாமலை கடும் விமர்சனம்!
ரகுபதி சட்டத்துறை அமைச்சரா அல்லது திமுக பேட்டை ரவுடியா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் விமர்சனம் செய்துள்ளார்.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக தான் தனது கட்சியில் சேர்த்து உள்ளது. இதனை பலமுறை நாங்கள் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளோம். வேண்டும் என்றால் மீண்டும் பெயர் பட்டியலுடன் வெளியிடுகிறோம். பாஜகவினர் ஆயுதம் வைத்திருந்தால் என்ன ஆயுதம் வைத்திருக்காமல் இருந்தால் என்ன? பாஜகவினர் ஆயுதம் வைத்திருப்பர் என்பது ஊரறிந்த விஷயம்” என விமர்சனம் செய்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமைச்சர் ரகுபதிக்கு ஓர் அன்பான வேண்டுகோள், அவர் முதலில் தமிழக காவல்துறையில் அடிப்படை காவலருக்கு அளிக்கப்படும் பயிற்சியை கற்றுக் கொள்ள வேண்டும். வண்டலூரில் இருக்கும் காவலர் பயிற்சி முகாமில் அவர் கலந்து கொள்ள வேண்டும். அதில் சொல்லிக் கொடுக்கப்படும் முதல் பாடமே, ஒரு காவலர் 80% குற்றங்களை தடுக்க என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும், ரவுடிகளை எப்படி கண்காணிக்க வேண்டும் என்பதுதான். மீதமுள்ள 20% தான் குற்றம் நடந்த பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி என கூறுவார்கள். இதனை அமைச்சர் ரகுபதி கற்றுக்கொள்ள வேண்டும்.
ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவாள் இருக்கு வெட்டி விடுவார்கள், பாஜககாரன் அரிவாள் வைத்திருப்பான் என்பது எல்லாருக்கும் தெரியும் என்பதெல்லாம் ஒரு பொறுப்பான அமைச்சர் பேசும் பதில் அல்ல. வேலூர் வழக்கில் திமுக கவுன்சிலர் மீதுதான் வழக்கு, திமுக கவுன்சிலரும் அவரது மகனும் சேர்ந்து பாஜக பிரமுகரை தலையின் இரும்பு ராடையை வைத்து அடித்து கொன்றுள்ளனர் என்பது தான் வழக்கு. அப்படி என்றால் திமுகவினர் தான் கையில் ஆயுதம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் சொன்னதை திருத்திக் கொள்கிறேன். அமைச்சர் ரகுபதியை காவல்துறை பயிற்சிக்கு அனுப்ப வேண்டாம். மாத மாதம் மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் நடக்கும் ரவுடிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளுங்கள். அப்போது ரவுடிகள் பேசுவதை இவர்கள் கவனிக்க சொல்லுங்கள். ரவுடிகள் பேசுவதும் அமைச்சர் பேசுவதும் ஒன்று போல் இருக்கிறது.” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.