மு. க.அழகிரி தனியாக கட்சி தொடங்குகிறாரா?
மு.க.அழகிரி தனியாக கட்சி தொடங்குவது தொடர்பாக, வரும் 20ம் தேதி, தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரையில், மறைந்த முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி அவர்களின் மூத்த மகனான அழகிரி, தனியாக கட்சி தொடங்குவது தொடர்பாக வரும் 20ம் தேதி, தனது ஆதரவாளர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 2014 -ஆம் ஆண்டு மார்ச் 25ஆம் தேதி, திமுகவின் தென்மண்டல செயலாளராக இருந்த முக அழகிரி கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
அதன்பின் நேரடி அரசியலில் பங்கேற்காமல், அவ்வப்போது அரசியல் பிரவேசம் குறித்து பேசி வரும் அழகிரி, தற்போது தனிக்கட்சி குறித்து ஆலோசனை ஈடுபட உள்ளதாக தெரிவித்து உள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாகியுள்ளது. இந்நிலையில், வரும் 20ம் தேதி நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின் மு.க. அழகிரி பல்வேறு இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாகவும் கலைஞர் பெயரில் இந்த அமைப்பு அல்லது கட்சி இருக்கலாம் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த ஆலோசனைக் கூட்டம் குறித்து பேசிய, அழகிரியின் ஆதரவாளர் இசக்கிமுத்து, ‘ திமுகவில் இருந்து அழகிரி உட்பட அவரின் ஆதரவாளர்கள் நீக்கப்பட்ட ஆறு ஆண்டுகளாகிறது. அப்போதிலிருந்து நாங்கள் அமைதியாக உள்ளோம். எங்களுக்கு திமுகவை தவிர வேறு கட்சி இல்லை. அதற்காக ஸ்டாலின் அவர்களை தலைவராக ஏற்று, திமுகவில் இணையவும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தினோம் என்றும், அதற்கு பலன் இல்லை, எனவே தான் இப்போது இந்த முடிவினை எடுத்துள்ளோம்.’ என்றும் தெரிவித்துள்ளார்.