கருணாநிதி குடும்பம் மன்னர் குடும்பமா? வாரிசு அரசியலுக்கு அதிமுக முற்றுப்புள்ளி வைக்கும் -இபிஎஸ் பேச்சு!
வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026 தேர்தல் இருக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
சென்னை : வானகரத்தில் நடைபெற்ற அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டதில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திமுகவை விமர்சித்து பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகள் கொடுத்து பச்சை பொய் சொல்லி மக்களை ஏமாற்றிய கட்சி திமுக தான். நடைபெறவுள்ள 2026 தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி என திமுக பகல் கனவு காண்கிறது. மு.க ஸ்டாலின் கனவு நிறைவேறாது.
கருணாநிதி குடும்பம் என்ன மன்னர் குடும்பமா? மன்னர் ஆட்சியில் தான் மன்னருக்கு பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். அதன்பிறகு அவருடைய மகன் முடி சூட்டிக்கொள்வார். கருணாநிதி மறைவுக்கு பிறகு ஸ்டாலின் முடி சூட்டிக்கொண்டார். இப்போது ஒரு வாரிசை கொண்டு வந்து முடி சூட்டிக்கொள்ள துடிக்கிறார்கள்.
எப்போது இவர் வந்தாரோ அப்போதே திமுகவுக்கு சனியன் பிடித்துவிட்டது. ஸ்டாலின் அவர்களே உங்களுடைய கனவு ஒரு போதும் நிறைவேறாது. மக்கள் ஏமாந்து ஒரு முறை உங்களுக்கு வாக்களித்து விட்டார்கள். கவர்ச்சிகரமாக பேசி மக்களை ஏமாற்றி தந்திரமாக நீங்கள் ஆட்சிக்கு வந்துவிட்டீர்கள். ஆனால், 2026-ஆம் ஆண்டு அது நடக்கவே நடக்காது.
கண்டிப்பாக 2026-அண்ணா திமுக ஆட்சி மலரும்.குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஒரு தேர்தலாக 2026 தேர்தல் அமையும். இன்றைக்கு திமுக சேர்ந்தவர்களே நொந்துபோய் இருக்கிறார்கள். ஏனென்றால் கட்சியில் உழைப்பவர்களுக்கு மரியாதையை இல்லை. கட்சிக்காக உழைத்தவர்கள் துணை முதல்வர் கிடையாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக அவரை எம்பி ஆக்கி, பிறகு துணை முதல்வராக ஆக்கினார்கள்.
எனவே, கருணாநிதி குடும்பத்தில் பிறந்தால் மட்டும் தான் இப்படி பதிவி உயர்வு கிடைக்கும் என்கிற நிலைக்கு திமுக வந்துவிட்டது. திமுக இப்போது ஒரு கட்சி இல்லை கார்ப்ரைட் கம்பெனியாக மாறிவிட்டது. அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் தான் ஆட்சி அதிகாரத்தில் பங்குபெறமுடியும். அப்படி பட்ட ஒரு காலத்தை 2026-இல் மக்கள் நிச்சயமாக மாற்றிகாட்டுவார்கள்” எனவும் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.