சசிகலா காலருகே ஊர்ந்து சென்று முதலமைச்சரானது உண்மையா – இல்லையா ? முதலமைச்சருக்கு ஸ்டாலின் கேள்வி
பழனிசாமி முதலமைச்சர் ஆனது எப்படி என்பது நாட்டுக்கே தெரியும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டத்தில் உள்ள திமுக அலுவலகத்தில் திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் திருவுருவச்சிலை மற்றும் அண்ணாவின் திருவுருவச்சிலையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால் நிச்சயம் சசிகலாவுடன் தண்டனை பெற்று 27ஆம் தேதி தான் விடுதலையாகி வெளியே வந்திருப்பார். அவ்வாறு தீர்ப்பு வந்தவுடன், முதலமைச்சராக பதவியேற்க இருந்த சசிகலா அவர்கள் அடுத்து யாரை முதலமைச்சராக உட்கார வைக்கலாம் என்று கூவத்தூரில் யோசித்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று அவர் காலில் ஏதோ ஊர்ந்து வந்தது.
அதற்கு மேல் நான் சொல்ல விரும்பவில்லை. அவ்வாறு சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர், தான் யாருடைய தயவிலும் முதலமைச்சர் ஆகவில்லை என்று சொல்லுவார்.கருணாநிதி முதலமைச்சரானபோது எம்.ஜி.ஆர். உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து தேர்ந்தெடுத்து கருணாநிதியை முதலமைச்சராக உட்கார வைத்தார்கள்.
ஆனால் பழனிசாமி முதலமைச்சர் ஆனது எப்படி என்பது நாட்டுக்கே தெரியும். இப்பொழுது கேட்கிறேன் பழனிசாமியைப் பார்த்து, “ஊர்ந்து வந்தது உண்டா? இல்லையா?” இதற்கு நீங்கள் பதில் சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.