மாநிலத்தை ஆள்வது நீதிமன்றமா? சட்டமன்றமா? – சீமான் கேள்வி

Default Image

தடையை நீக்கினால் விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் ஒழுங்கை காரணங்காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால், அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில்,  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணியை நவம்பர் 6 அன்று நடத்திக் கொள்வதற்கு அனுமதியளித்துத் தீர்ப்பு வழங்கியிருக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் முடிவு பெரும் ஏமாற்றமளிக்கிறது. ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணி நடத்தப்பட்டால், சட்டம் ஒழுங்கும், சமூக அமைதியும் குலைக்கப்படுமெனக் கருதி, தமிழக அரசு அதற்கு அனுமதி மறுத்திருக்கும் நிலையில், சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே பல முன்மாதிரி வழக்குகளில் அறிவுறுத்தியிருக்கிற நிலையில் அதனை ஏற்காது நீதிமன்றம் அனுமதி வழங்கிருப்பதென்பது ஏமாற்றமளிக்கிறது.

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் பேரணிக்கு தமிழகத்தின் பெருவாரியானக் கட்சிகளும், பொது மக்களும் ஒருமித்து எதிர்ப்புத் தெரிவித்திருப்பதும், தமிழகத்தில் நிலவி வரும் மதநல்லிணக்கமும், சகோதரத்துவ மனப்பான்மையும் சிதைந்துவிடக்கூடாது என்கிற பொது நோக்கத்திற்காகத்தான்! அவ்வுணர்வின் பிரதிபலிப்பாகவே, தமிழக அரசும் அனுமதி வழங்காமல் பேரணிக்குத் தடைவிதித்தது. மாநிலத்தின் நலன் கருதி, மக்களின் பாதுகாப்பை மனதிற்கொண்டு எடுக்கப்பட்ட இம்முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் இத்தீர்ப்பு பல்வேறு கேள்விகளுக்கு வித்திடுகிறது.

மதுக்கடைகளை மூடக்கோரி சமூக ஆர்வலர்களால் தொடுக்கப்படுகிற பொதுநல வழக்குகளில், அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாதெனக்கூறி, தட்டிக்கழிக்கும் நீதிமன்றம், மதச்சிக்கல் ஏற்பட்டுவிடக் கூடாதென்பதற்காக அரசு எடுத்த கொள்கை முடிவைச் செயல்படுத்த விடாததேன்? மாணவர்கள் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேர்வு வேண்டுமென்ற அரசின் முடிவை ஏற்கிற நீதிமன்றம், இப்பேரணி விவகாரத்தில் மட்டும் விதிவிலக்கைக் கடைபிடிப்பதேன்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு சட்டம் ஒழுங்கை காரணங்காட்டி பேரணிக்கு அளித்த தடையை நீதிமன்றம் நீக்கினால், அதனால் விளையக்கூடிய விரும்பத்தகாத செயல்களுக்கு யார் பொறுப்பேற்பது? என கேள்வி எழுப்பியுள்ளார்.

சட்டம் ஒழுங்கு சிக்கல் ஏற்படுமெனக்கூறி எடுத்துரைத்தும், நீதிமன்ற அவமதிப்பெனக்கூறி, பேரணியை அனுமதிக்க வலியுறுத்துகிற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு சரியானதுதானா?, எல்லாவற்றையும் மீறி அப்பேரணி நடைபெறும்பட்சத்தில் அதில் ஏதேனும் கொடுஞ்செயல்கள், விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்றால் அதற்கு யார் பொறுப்பேற்பது? தமிழகத்தின் பொது அமைதியைக் கருதி, சட்டம் ஒழுங்கை காக்க மாநில அரசு எடுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இம்முடிவைக்கூட நீதிமன்றங்கள் ஏற்க முன்வராதென்றால், மாநிலத்தை ஆள்வது நீதிமன்றமா? சட்டமன்றமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு எந்தக் காலத்திலும் அனுமதி வழங்கக் கூடாதென தமிழகத்தில் எதிர்ப்புகள் வலுத்து வரும் நிலையில், இதுவரை தமிழகத்தை ஆண்ட அரசுகள் அனுமதி வழங்காத நிலையில், தற்பொழுது ஆளும் திமுக அரசு நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நோக்கத்தை எடுத்துக் கூறாது. பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா மீதான தடையையே ஒரு காரணமாகக் கூறுவது வலுவற்ற வாதமில்லையா? காந்தி ஜெயந்தி அன்று மட்டுமல்லாது எந்த நாளில் பேரணி நடத்தினாலும் தமிழகத்தின் அமைதி குலையுமென வாதிட வேண்டிய தமிழக அரசு, மற்ற நாட்களில் நடத்துவது சிக்கலில்லை என உயர் நீதிமன்றத்தில் கூறியிருப்பது மோசடித்தனமில்லையா? எதற்கு இந்தக் குழப்பவாதம்? இரட்டைவேடம்?.

ஆகவே, இவ்விவகாரத்தில் தமிழக அரசு சீரியக் கவனமெடுத்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கெதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, ஆர்.எஸ்.எஸ்.ஸின் பேரணிக்கான தடையை சட்டப்படி உறுதிசெய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்