பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டியவர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதா? – சீமான்
பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டியவர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதா? என சீமான் அறிக்கை.
பொது விநியோகக்கடைகளில் வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டிய திருத்தணியைச் சேர்ந்தப் பயனாளி நந்தன் மீது அவதூறு வழக்குத் தொடுத்ததன் விளைவாக, அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘பொது விநியோகக்கடைகளில் வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டிய திருத்தணியைச் சேர்ந்தப் பயனாளி நந்தன் மீது அவதூறு வழக்குத் தொடுத்ததன் விளைவாக, அவரது மகன் குப்புசாமி தீக்குளித்து மாண்ட செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துத் துயரத்தில் பங்கெடுக்கிறேன்.
தனது தந்தை மீது வழக்குத் தொடுக்கப்பட்ட விரக்தியிலேயே மகன் குப்புசாமி மனவேதனைக்கு ஆட்பட்டு தற்கொலை செய்துகொண்டாரெனும் செய்தியானது பெரும் மனவலியைத் தருகிறது. பொறுப்புடனும், கடமையுணர்ச்சியுடனும் செயல்படத்தவறி, எளியவர்கள் மீது அதிகாரப் பலத்தைச் செலுத்தி, எதேச்சதிகாரப்போக்கைத் திணிக்கும் அரசின் கொடுங்கோல் நடவடிக்கையே ஒரு உயிரை அநியாயமாகப் போக்கியிருக்கிறது. தனக்கு வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்புப் பொருட்களில் இறந்த பல்லி கிடந்ததாகக் கூறி, பயனாளி நந்தன் குற்றஞ்சுமத்தியதால் அரசுக்குக் கெட்டப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்புவதாகக்கூறி, அவர் மீது சட்டத்தைப் பாய்ச்சிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. அரசு நிர்வாகத்தில் நடைபெறும் குளறுபடிகளையும், முறைகேடுகளையும் சுட்டிக்காட்டி எடுத்துரைத்தாலே அவர்கள் மீது வழக்குப் பாய்ச்சி, கருத்துரிமையின் குரல்வளையை நெரிப்பது என்பது எந்தவகையிலும் ஏற்புடையதல்ல; இது அடித்தட்டு மக்களை அரசதிகார வலிமையைக் கொண்டு அச்சுறுத்தும் மிரட்டல் போக்காகும். அரசை எதிர்த்துக் கருத்துக்கூறுவோரை, அவதூறு வழக்கின் கீழ் பிணைப்பதும், கொடுஞ்சட்டத்தின் கீழ் முடக்க நினைப்பதும் ஏற்கவே முடியாத சனநாயகப்படுகொலையாகும்.
பொது விநியோகக்கடைகளில் வழங்கப்பட்டு வரும் பொருட்களின் தரமானது மிகவும் மலினமாக இருப்பது குறித்தப் பொதுமக்களின் குற்றஞ்சாட்டுகள் காலங்காலமாக முன்வைக்கப்பட்டு வருவதையும், அவைகள் முற்றிலும் உண்மைத்தன்மை உடையன என்பதையும் நாடறியும். அரசின் அத்தனைத் துறைகளிலும் இலஞ்சம், ஊழல் புரையோடிப் போயிருப்பதும், அதனால், மக்களுக்குக் கிடைக்க வேண்டிய சேவைகள் யாவும் பாதிப்புற்று, தரமற்றவைகளையே அனுபவிக்க வேண்டிய இழிநிலைக்கு மக்கள் தள்ளப்படுவதும் வெளிப்படையாக நடந்தேறிக் கொண்டிருக்கும் பெருங்கொடுமைகளாகும்.
தற்போது திமுக அரசால் வழங்கப்பட்டப் பொங்கல் பரிசுத்தொகுப்புகளிலுள்ள பல பொருட்கள் தரம் குன்றியிருப்பது குறித்து பொதுமக்கள் பரவலாக அவலக்குரலெழுப்பி வரும் நிலையில், அவர்களை அச்சுறுத்தும் வகையிலும், அரசின் குறைபாடுகளையும், தவறுகளையும் மறைக்கும் வகையிலுமே நந்தன் மீது வழக்குத் தொடுக்கப்பட்டிருக்கிறது. இது என்னமாதிரி சனநாயகச்செயல்பாடு? இத்தகைய அணுகுமுறை எந்தவகையில் ஏற்புடையதாகும்? தரமற்றப் பொருட்களைத் தந்துவிட்டு, அதுகுறித்து பொதுமக்கள் எவரும் புகார் தெரிவிக்காவண்ணம், அவர்களின் வாயடைக்க முனைவதுதான் சமூகநீதி ஆட்சியா? பொங்கலிட அரிசி தருவதாகக்கூறிவிட்டு, ஒரு உயிர் போகக்காரணமாக இருந்து வாய்க்கரிசி இடுவதுதான் விடியல் ஆட்சியா? வெட்கக்கேடு!
ஆகவே, ஆளும் திமுக அரசின் குறைகளையும், குற்றங்களையும் சுட்டிக்காட்டி வெளிப்படுத்தும் எளியவர்கள் மீது சட்டத்தின் மூலம் அடக்குமுறையைப் பாய்ச்சும் கொடுங்கோல் செயல்பாடுகளுக்கு எனது வன்மையான எதிர்ப்பினைப் பதிவுசெய்து, அச்சுறுத்தலால் தனது மகனை இழந்து, பாதிக்கப்பட்டு நிற்கும் நந்தன் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டையும், நீதியையும் பெற்றுத் தர வேண்டுமென தமிழக அரசை நாம் தமிழர் கட்சி சார்பாகக் கேட்டுக்கொள்கிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத்தொகுப்பில் பல்லி கிடந்ததாகக் குற்றஞ்சாட்டியவர் மீது அவதூறு வழக்குத் தொடுப்பதா?https://t.co/sXEEAg792v@CMOTamilnadu @mkstalin pic.twitter.com/Ti7cJhZbQl
— சீமான் (@SeemanOfficial) January 15, 2022