முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? – நிதியமைச்சர் பிடிஆர்
முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், அவர்களே பொறுப்பு என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், எங்கெல்லாம் தவறு நடந்து உள்ளதோ, அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்படும். அரசு குடியிருப்புகள் தரமற்ற முறையில் கட்டப்பட்ட விவகாரத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கும்போது, முன்னாள் அமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியும் என கேள்வி எழுப்பியுள்ளார். என் துறையில், எனது அதிகாரம் இன்றி ஏதும் நடக்க கூடாது என்ற விதிமுறையை தீவிரமாக பின்பற்றி, அதனை உருவாக்க முயற்சி செய்வதாகவும் தெரிவித்த அமைச்சர், முன்னாள் அமைச்சர்களுக்கு தெரியாமல் தவறு நடந்தாலும், ஜனநாயக முறைப்படி அவர்களே பொறுப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார்.