பெரியாரா? பிரபாகரானா? மோதிப்பார்த்து விட வேண்டியது தான் – சீமான் ஆவேசம்!
பெரியாரை விமர்சித்ததும் பிரபாகரனுடன் எடுத்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
சென்னை: பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சையை கிளப்பும் வகையில் பேசிய நிலையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர் இன்று காலை 10 மணியளவில் சீமான் வீட்டை முற்றுகையிட்டனர். இதனையடுத்து, நீலாங்கரையில் உள்ள நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு 220 போலீசார் குவிக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பெரியார் குறித்து சீமான் பேசியதற்கு சீமான் வீட்டை பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 முற்றிகையிட்ட நிலையில், மேலும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், என்னுடைய கருத்து தவறு என்றால் பெரியார் கருத்தும் தவறு தான் என மீண்டும் பேட்டியளித்துள்ளார்.
இது குறித்து பேசிய சீமான் ” பிரபாகரனுடன்எடுத்த அந்த புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என்று கூறுகிறீர்கள் 15 வருடங்களாக எங்கிருந்தீர்கள்? பெரியார் மீது ஒரு அடி விழுந்தவுடன் அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்று வருகிறீர்கள் பெரியாரா பிரபாகரனா என்று மோதி பார்ப்பது என்று ஆகிவிட்டது அதனால் மோதி விட வேண்டி தான்.. ஆனால், குறுக்கே வருவது என்னுடைய சித்தப்பன், மாமா, பெரியப்பனாக இருப்பதால் மோதி பார்க்க யோசிக்க வேண்டியதாக இருக்கிறது.
பெரியாரை நாம் விமர்சித்து பேசியதற்கு திராவிடர் கழகமே இன்னும் அமைதியாக இருக்கிறது. ஆனால், எதற்காக மற்ற அமைப்புகள் பேசிக்கொண்டு இருக்கிறது என்று எனக்கு தெரியவில்லை. கி.வீரமணியை இதற்கு பதில் சொல்ல சொல்லுங்கள். கொளத்தூர் மணி என்பவர் நான் என்னுடைய வாழ்க்கையில் மதிக்கும் ஒரு மிகப்பெரிய மனிதர்.
சோ.ராமசாமியையும், குருமூர்த்தியையும் அழைத்து சென்று ஆதித்தனார் காலில் விழுந்து வாங்கி வந்தேன் என்கிறார்கள். பொய்யை தவிர அவர்களுக்கு வேறு எதுவும் சொல்ல தெரியாது என்று நினைக்கிறேன். சோவுக்கும், குருமூர்த்திக்கும் நாதகவுக்கும் என்ன சம்மந்தம் உள்ளது?” எனவும் கேள்வி எழுப்பினார்.
அதனைத்தொடர்ந்து பேசிய அவர் ” பெரியார் அடிப்படையிலேயே பிழையானவர். தமிழ் முட்டாள்களின் மொழி தமிழில் ஆங்கிலம் கலந்து பேசவேண்டும் என்று கூறியவர். கர்நாடகா நாட்டில் பிறந்த அவர் தமிழ்நாட்டுக்காக என்ன செய்திருக்கிறார்? பெரியார் தொடர்பாக நான் இன்னும் முழுமையாக பேசவே தொடங்கவில்லை..கையை தான் ஓங்கி இருக்கிறேன் அதற்குள் இவ்வளவு அலறுகிறார்கள்.
கடந்த காலங்களில் பெரியார் பேசியதை தற்போது எடுத்து பேசினால் ஏன் பதற்றம் ஏற்படுகிறது? என்னுடைய கருத்து தவறு என்றால் பெரியார் கருத்தும் தவறு தான். பெரியார் தொடர்பான எனது கருத்துக்கு வெறும் அவதூறை தவிர வேறு என்ன பதில் சொல்கிறீர்கள்?பெரியார் சொன்னதை எடுத்துச் சொல்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது.பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு வந்தால் அங்கு பதில் அளிக்கப்போகிறேன்” எனவும் சீமான் தெரிவித்துள்ளார்.