தமிழ் மொழியை வளர்க்க ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா? – அண்ணாமலை
தமிழ் மொழியை வளர்க்க ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா? என கேள்வி எழுப்பி அண்ணாமலை அறிக்கை.
மக்களைத் திசை திருப்பாமல் தமிழ் மொழியை வளர்க்க போதிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என அண்ணாமலை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘நீதிக்கட்சி, தீராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் என்று தமிழகத்தில் பல்வேறு காலகட்டத்தில் ஹிந்தி எதிர்க்கப்பட்டு தமிழ் காக்கப்பட்டதாக கட்டுக்கதைகளை கட்டவிழ்த்து விட்டது திமுக. ஆனால் உண்மை என்ன என்று இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
1965ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்னதாக மாணவர்களை தூண்டி விட்டு ஹிந்தி மொழிக்கு எதிராக போராட்டங்களை நடத்தியது திமுக. அதற்கு பின் ஆட்சிக்கு வந்த திமுக தமிழை வளர்க்க ஆக்கப்பூர்வமான முன்னெடுப்புகளை தவிர்த்துவிட்டு, தங்கள் ஆட்சி சரிவை நோக்கி பயணிக்கும் போதெல்லாம், எதிர்க்கட்சி வரிசையை அலங்கரிக்கும் போதெல்லாம் ஹிந்தி எதிர்ப்பை
மட்டும் பயன்படுத்திக்கொண்டது. இதுவே வரலாறு.
2021ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேசிய சாதனை கணக்கெடுப்பில் மூன்றாம் வகுப்பில் பயிலும் மாணவர்களில் வெறும் 25 சதவீத மாணவர்கள் மட்டுமே தமிழில் பிழையின்றி எழுத மற்றும் படிக்க தெரிந்தவர்களாக இருக்கின்றனர் என தெரியவந்துள்ளது.
2018ஆம் ஆண்டின் கல்வி நிலை அறிக்கையின்படி ஐந்தாம் வகுப்பில் பயிலும் 40 சதவீத மாணவர்கள் மட்டுமே இரண்டாம் வகுப்புக்கான ஒரு எளிய கட்டுரையை வாசிக்கும் திறன் கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. பல காலமாக ஹிந்தி எதிர்ப்பு என்று சொல்லிக்கொண்டு தமிழில் கோட்டை விட்டதன் விளைவு தான் இது.
தேவாரம், திருவாசகம், தொல்காப்பியம் போன்ற இலக்கண இலக்கியங்களின் பெருமையை பள்ளியில் பயில்விக்க சிறப்பு ஆசிரியர்களை நியமிக்க அரசு வழிவகை செய்யவேண்டும்.
நாம் வளர என்ன தேவை என்பதை சிந்திப்போம். நம் மொழியை காக்க வெற்று விளம்பரங்கள் மற்றும் போராட்டங்கள் மட்டும் போதாது என்பதை தமிழக அரசு இனியாவது உணர வேண்டும் என தெரிவித்துள்ளார்.
தமிழ் மொழியை வளர்க்க ஹிந்தியை எதிர்த்தால் மட்டும் போதுமா?
மக்களைத் திசை திருப்பாமல் தமிழ் மொழியை வளர்க்க போதிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும். #Save_Our_Tamil #தமிழ்_மொழியை_காப்போம் pic.twitter.com/0Jd6eV26WY
— K.Annamalai (@annamalai_k) October 18, 2022