அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா பாஜக..?
உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை வரும் செப்டம்பர் மாதம் 15 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று பாஜக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலை எதிர்கொள்வது குறித்தும், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் 16 தொகுதிகளில் தோல்வி அடைந்தது குறித்தும் விவாதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் எல். முருகன், உள்ளாட்சி தேர்தலை சந்திக்க பாஜக தயாராக இருப்பதாக கூறினார். உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து தேசிய தலைவர்கள் தான் எப்போதும் கொள்கை முடிவு எடுக்கும். உள்ளாட்சி தேர்தல் வரும்போது சூழ்நிலையை கருதி கூட்டணி அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் சட்டமன்ற தேர்தல், பாராளுமன்ற தேர்தலில் கூட்டணியில் இருப்போம், ஆனால் உள்ளாட்சித் தேர்தல் அப்படியல்ல என எல். முருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலை அதிமுகவுடன் இணைந்து பாஜக எதிர்கொண்ட நிலையில் 4 இடங்களில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.