ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகள்.. பயணசீட்டு கட்டாயம் – சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு
கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என நிர்வாகம் அறிவிப்பு.
சென்னையில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள் சென்னை மெட்ரோ இரயிலில் பயணிக்க பயணச்சீட்டுகளை பெற வேண்டும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடரை சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், சென்னை சூப்பர் கிங்ஸ் உடன் இணைந்து வழங்கி வந்தது.
அதன்படி, ஐ.பி.எல் போட்டிகளுக்கான பார்கோட் போடப்பட்ட கியூ ஆர் டிக்கெட்டுகளை பயன்படுத்தி மெட்ரோ இரயிலில் எந்தவித கட்டணமும் இல்லாமல் பயணித்து வந்தனர். இதனை தொடர்ந்து நடக்க இருக்கும் ஐபிஎல் ப்ளே ஆஃப் சுற்றுகள் முற்றிலும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, ஐபிஎல் டிக்கெட்டுகளை மெட்ரோ இரயில் பயணச்சீட்டாக பயன்படுத்த இயலாது சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் மே 23 மற்றும் 24-ம் தேதிகளில் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் பிளே ஆஃப் போட்டிகளை கண்டுகளிக்க வருகை தரும் கிரிக்கெட் ரசிகர்கள், மெட்ரோ பயணிகள், மெட்ரோ இரயிலில் பயணிப்பதற்கு வழக்கமான மெட்ரோ இரயில் பயணச்சீட்டுகளை பெற்றுகொள்ளுமாறு சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
பயணிகள் மெட்ரோ இரயில் பயணச்சீட்டுகளை வாட்ஸ்அப் (91-8300086000), க்யூஆர் அல்லது சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மூலம் பெற்றுக்கொள்ளலாம். ஏனெனில் டிக்கெட் கவுன்டர்கள் இரவு 11 மணிக்குப் பிறகு செயல்படாது. மேலும், சென்னையில் போட்டி நடைபெறும் நாட்களில் கிரிக்கெட் ரசிகர்களுக்காக மே 23 மற்றும் 24 ஆகிய இரு தினங்களிலும் இரவு 1 மணி வரை மெட்ரோ இரயில்கள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press Release 22.05.2023 pic.twitter.com/pNpOFWkSRf
— Chennai Metro Rail (@cmrlofficial) May 22, 2023