IPL 2018: சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பாதுகாப்பு விளையாட்டை தொடங்கிய கமாண்டோ, அதிதீவிர படை பாதுகாப்பு…!
11-வது ஐபிஎல் சீசன் போட்டி கடந்த ஏப்ரல் 7-ம் தேதி தொடங்கியது.
காவிரி நதிநீர் பங்கீட்டு விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதனை மத்திய அரசு செயல்படுத்தத் தவறியது. இதனால் தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வலுத்து வருகின்றது. மேலும், மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் ஐ.பி.எல் போட்டியை சென்னையில் நடத்தவிடமாட்டோம் என்று சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக சென்னையில் ஐ.பி.எல் போட்டிகள் நடைபெறாது என்றும், சென்னை போட்டிகளை இடம் மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் ஐ.பி.எல் அமைப்பின் தலைவர் ராஜிவ் சுக்லா ,சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஐ.பி.எல் டி20 போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என தெரிவித்துவிட்டார்.
இதன்படி சென்னை காவல்துறை, சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ மற்றும் அதிதீவிர படை பாதுகாப்பு போடப்படும் என அறிவித்துள்ளது.
சேப்பாக்கம் மைதானத்திற்கு கமாண்டோ படையின் ஒரு அணியும் அதிதீவிர படையின் 4 குழுக்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளாது.
ஐபிஎல் போட்டியை முன்னிட்டு மைதானத்தின் உள்ளேயும் வெளியேயும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் சேப்பாக்கம் மைதானத்தை சுற்றியுள்ள சாலைகள் நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும் என்றும் சென்னை போலீஸ் அறிவித்துள்ளது. சென்னை அண்ணா சாலை, வாலாஜா சாலை நாளை மாலை 6 மணிக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பலத்த சோதனைக்குப் பிறகே பார்வையாளர்கள் மைதானத்திற்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.இந்நிலையில் போட்டி நடைபெறும் நாளை தான் என்ன நடக்கும் என்பது தெரியும் .
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.