கிணற்றில் இருந்தது மனித கழிவே அல்ல… தேனடை தான்.! ஆய்வில் தகவல்.!
சென்னை : விழுப்புரம், கே.ஆர்.பாளையம் கிராம கிணற்றில் இருந்தது மனித கழிவு அல்ல, தேனடை என்று அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகே கே.ஆர்.பாளையம் கிராமத்தில் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மோட்டார் மூலம் அருகில் உள்ள குடிநீர் தொட்டிக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு கிராமத்தில் உள்ள சுமார் 100 குடும்பங்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இப்படி இருக்கும் இந்த கிணற்றின் அருகிலும், உள்ளே சில அடி ஆழத்தில் இருந்த சுவரிலும் மனித மலம் இருந்தது போல ஊர்மக்கள் பார்த்து சந்தேகத்துள்ளனர். இதனை அடுத்து, கஞ்சனூர் பகுதி காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
இந்த தகவல் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழநிக்கு தெரிவிக்கப்பட்டு, அவர் உத்தரவின்பெயரில், விக்கிரவாண்டி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், கூடுதல் ஆட்சியர் குழு தலைமையில் அதிகாரிகள் கிணற்றின் அருகே ஆய்வு செய்தனர். மனித மலம் போல தெரிந்த பகுதியை எடுத்து சோதனை செய்ததில் அது மனித மலம் அல்ல தேனடை என்பது உறுதிசெய்யப்பட்டு ஊர் மக்களிடம் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து ஊர் மக்களின் சந்தேகம் விலகியது.
தற்போது திறந்தவெளி கிணற்றை சுற்றி இரும்பு வேலி அமைக்கவும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.