ஓபிஎஸ் அணி சார்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ அறிமுகம்!
முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. ஓபிஎஸ் கடந்த ஓராண்டுக்கு மேலாக தனித்து செயல்பட்டு வரும் நிலையில், தங்களது தரப்பு குரலை அனைத்து மக்களிடமும் கொண்டு சேர்க்கும் வகையில் ஊடகம் ஒன்று தொடங்க திட்டமிட்டு வந்தார்.
அந்தவகையில் இன்று ஓபிஎஸ் தரப்பில் நமது ‘புரட்சித் தொண்டன்’ என்ற பெயரில் நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நாளேட்டின் பிரதியை சென்னை எழும்பூரில் உள்ள அசோகா ஹோட்டலில் நடைபெற்ற நிகழ்வில் ஓபிஎஸ் அணி அரசியல் ஆலோசகரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரன் வெளியிட்டார். அதிமுக தரப்பில் நமது அம்மா என்ற நாளிதழ் வெளியாகி வரும் நிலையில், அதற்கு போட்டியாக ஓ பன்னீர்செல்வம் அணி சார்பில் நமது புரட்சி தொண்டன் என்ற நாளிதழ் தொடங்கப்பட்டுள்ளது.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தபோது, அதிமுகவின் நாளேடாக நமது எம்.ஜி.ஆரும், சேனலாக ஜெயா டி.வி-யும் செயல்பட்டு வந்தன. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட குழப்பம் காரணமாக, சசிகலா, தினகரன் கட்சியை விட்டு விலக்கப்பட்ட நிலையில், தற்போது நமது எம்.ஜி.ஆர், ஜெயா டி.வி ஆகிய நிறுவனங்களை டி.டி.வி.தினகரன், சசிகலா தரப்பு நிர்வகித்து வருகிறது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இணைந்து ‘நமது அம்மா’ என்ற புதிய நாளேட்டை தொடங்கினர். அதில்தான், அதிமுகவின் அதிகாரபூர்வ அறிவிப்பு, கட்சி நிகழ்ச்சிகள், கட்சி சார்ந்த செய்திகள் உள்ளிட்டவை வெளிவந்தன. பின்னர் ஒற்றை தலைமை பிரச்சனையால், ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வரும் நிலையில், புதிய நாளேட்டை தொடங்கினார் ஓபிஎஸ்.