தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க மதுரைக்கிளை இடைக்கால தடை.!
- வாக்கு எண்ணிக்கையிலும், வெற்றி அறிவிப்பிலும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறி வேட்பாளர் தேவி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவு.
- மாநில தேர்தல் ஆணையம் மற்றும் வேட்பாளர் பிரியதர்ஷினி பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை வருகின்ற 7-ம் தேதி ஒத்திவைத்தது.
சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்தில் உள்ள சங்கராபுரம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு தேவி என்பவரும் , தேவியை எதிர்த்து பிரியதர்ஷினி என்பவர் போட்டியிட்டார்.
நேற்று முன்தினம் காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே இருவரும் முன்னணி நிலவரம் மாறிக் கொண்டே இருந்தது.இந்நிலையில் முதலில் தேவி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு வெற்றிச்சான்றிதழும் கொடுக்கப்பட்டது.
பின்னர் பிரியதர்ஷினி 63 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு அவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்நிலையில் 2 பெண்களுக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் வேட்பாளர் தேவி உயர்நீதின்மன்ற மதுரை கிளையில் அவசர வழக்கு ஓன்று தாக்கல் செய்தார்.அதில் , வாக்கு எண்ணிக்கையிலும், வெற்றி அறிவிப்பிலும் முறைகேடு நிகழ்ந்திருப்பதாக கூறி இருந்தார். மேலும் பஞ்சாயத்து தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க தடைவிதிக்க வேண்டும் என கூறினார்.
இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி புகழேந்தி ,சுப்பிரமணியன் அமர்வு விசாரித்தது. பின்னர் சிவகங்கை சங்கராபுரம் பஞ்சாயத்து தலைவராக பிரியதர்ஷினி பதவியேற்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இடைக்கால தடை விதித்து உள்ளது.மேலும் மாநில தேர்தல் ஆணையம் மற்றும் வேட்பாளர் பிரியதர்ஷினி பதில் அளிக்க வேண்டும் என கூறி வழக்கை வருகின்ற 7-ம் தேதி ஒத்திவைத்தது.