உட்கட்சித் தேர்தல் ஆலோசனை – நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்
திமுக 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில் நாளை (பிப்ரவரி 17-ஆம் தேதி) மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
திமுக 15-வது உட்கட்சி பொதுத்தேர்தல் பிப்ரவரி 21-ம் தேதி முதல் நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்தது. கிளை, பேரூர், ஒன்றிய, நகரம், மாநகரம் வாரியாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது .அதனை தொடர்ந்து மாவட்ட கழகம், தலைமை கழகம், பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.முதற்கட்டமாக கிளைக்கழகத்திற்கும் அதனை தொடர்ந்து பேரூர், ஒன்றிய, கழகத்திற்கும் தேர்தல் நடைபெறும்.இதற்கு பின்னர் புதிய பொதுக்குழு கூட்டப்பட்டு தலைவர் ,பொதுச்செயலாளர் ,பொருளாளர் மற்றும் தணிக்கைக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே நாளை (பிப்ரவரி 17-ம் தேதி) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது என்று திமுக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டார். சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நாளை ( பிப்ரவரி 17-ஆம் தேதி) மாலை 5 மணிக்கு நடைபெறும் கூட்டத்தில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.