எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழக்கு : 15 நாட்கள் நீதிமன்ற காவல்., இன்ஸ்பெக்டர் கைது.!
கரூர்: 100 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் சட்டவிரோதமாக பதிவு செய்ததாக பதியப்பட்ட புகாரின் கீழ் அவரை நேற்று சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர்.
கரூர், குப்பிச்சிபாளையம் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலி சான்றிதழ்கள் மூலம் போலியாக பத்திரப்பதிவு செய்ததாக கரூர் காவல் நிலையத்தில் கடந்த ஜூன் 14ஆம் தேதி புகார் பதியப்பட்டது.
மேலும், போலியாக பத்திரப்பதிவு செய்தும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அவரது சகோதரர் சேகர் உறவினர் பிரவீன் உள்ளிட்டோர் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பெயரில் 13 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் இந்த வழக்கு விசாரணையானது அண்மையில் சிபிசிஐடி காவல்துறையினருக்கு மாற்றம் செய்யப்பட்டது .
இந்த வழக்கு விசாரணையின் போது, வழக்கில் இருந்து முன்ஜாமீனுக்காக எம்.ஆர்.விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் முறையிட்டார். ஆனால், அவரது மனு நீதிமன்த்தில் ஏற்றுக்கொள்ளப்படாவில்லை. இதனை அடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் வெளியூர் சென்றதாக கூறப்பட்டது .
எம்.ஆர்.விஜயபாஸ்கரை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் தனிப்படைகள் அமைத்து இருந்த நிலையில், நேற்று கேரள மாநிலம் திருச்சூரில் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் வழக்கில் தொடர்புடைய அவரது உறவினர் ஆகியோரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் கரூர் அழைத்துவரப்பட்டு அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணை முடிந்ததும், கரூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தபட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த வழக்கில், போலி பத்திரப்பதிவுக்கு உதவியாக இருந்ததாக கூறி வில்லிவாக்கம் காவல் ஆய்வாளர் ப்ரித்திவிராஜை சிபிசிஐடி போலீசார் தற்போது கைது செய்துள்ளனர். கரூர் காவல் ஆய்வாளராக பொறுப்பில் இருந்த போது காவல் ஆய்வாளர் பிரித்விராஜ் பத்திரப்பதிவுக்கு எதுவாக, பத்திரங்கள் தொலைந்து போனது என கூறி Non traceable certificateஐ போலியாக கொடுத்ததாக பிரித்விராஜ் மீது புகார் கூறப்பட்டுள்ளது.