நூதன முறையில் ஏ.டி.எம்-மில் கொள்ளை : எஸ்பிஐ டெபாசிட் ஏடிஎம்களில் தற்காலிகமாக பணம் எடுக்க தடை!
எஸ்பிஐ டெபாசிட் வசதியுள்ள ஏடிஎம்மில் நூதன முறையில் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதால், எஸ்பிஐ வங்கியின் டெபாசிட் ஏடிஎம்மில் தற்காலிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள ஏடிஎம்களில் டெல்லியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் நூதன முறையில் பணம் திருடி உள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னையில் இருசக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து சென்னையில் உள்ள தரமணி, வடபழனி, வேளச்சேரி ஆகிய பகுதிகளிலுள்ள ஏ.டி.எம்களில் சென்சாரை மறைத்து இந்த இளைஞர்கள் பணம் திருடி உள்ளது அம்பலமாகியுள்ளது.
கடந்த 19ஆம் தேதி மற்றும் 20-ஆம் தேதி என இரண்டு நாட்கள் இந்த பணம் திருட்டு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதுவரை 20 லட்சம் வரை பணம் திருடப்பட்டு இருப்பதாக காவல்துறையினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெபாசிட் வசதி கொண்ட ஏடிஎம்களில் தான் இந்த கொள்ளை சம்பவம் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக தனிப்படை போலீசார் மற்றும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனையடுத்து, டெபாசிட் வசதி கொண்ட எஸ்பிஐ வங்கிகளில் தற்காலிகமாக பணம் எடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இது குறித்து எஸ்பிஐ வங்கி அதிகாரிகளுடன் நாளை காவல்த்துறையினர் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.