டிஆர் பாலுக்கு ஒரு கார் கூட இல்ல.. 1.46 கோடி கடன்.. பிரமாண பத்திரத்தில் வெளியான தகவல்!
TR Balu: ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக எம்பி தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள தகவல்கள் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த ஒரு வாரமாக நடைபெற்று நேற்று முன்தினம் நிறைவு பெற்றது. அப்போது, அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்கள் தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.
இந்த வேட்புமனு தாக்கலின்போது வேட்பாளர்கள் தங்களது சொத்து விவரங்கள் தொடர்பான பிரமாண பத்திரமும் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், அதுதொடர்பான தகவல்கள் தற்போது வெளியாகி வருகிறது. அந்தவகையில், திமுக எம்பியும், பொருளாளருமான டிஆர் பாலு ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
அவரது வேட்புமனுவும் ஏற்கப்பட்டது. இந்த நிலையில், டிஆர் பாலு தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் உள்ள சொத்து உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதில், 3 முறை மத்திய அமைச்சராக இருந்த டிஆர் பாலுவுக்கும், அவரது மனைவிகளுக்கும் சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும் தனக்கு சொந்தமாக ஒரு டிராக்டர் இருக்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று தனக்கு ரூ.1.46 கோடி கடன் இருப்பதாகவும், அவரது மனைவி பொற்கொடிக்கு ரூ.6.60 கோடி கடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். டிஆர் பாலுவின் முதல் மனைவிடம் ஒரு கிலோ தங்கம், 2வது மனைவியிடம் 100 சவரன் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.16.31 கோடி என குறிப்பிட்டுள்ள டிஆர் பாலு, தன்னுடைய மனைவிகள் பெயரில் ரூ.23.90 கோடி சொத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.