திருவள்ளூர் மக்களவை தொகுதி ..ஓர் பார்வை..!

Thiruvallur

தமிழக மக்களவைத் தொகுதிகளில் முதல் தொகுதியாக உள்ளது திருவள்ளூர் மக்களவைத் தொகுதி. இந்திய சுதந்திரத்துக்கு பிறகு 1952ஆம் ஆண்டு முதல் மக்களவைத் தேர்தலை திருவள்ளூர் மக்களவைத் தொகுதி சந்தித்தது. மூன்று தேர்தல்களை எதிர்கொண்ட பிறகு திருவள்ளூர் மக்கள் மக்களவைத் தொகுதி நீக்கப்பட்டது.

2008ஆம் ஆண்டு மறுசீராய்வு :

அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தொகுதி மறுசீராய்வுக்கு பிறகு 2009 முதல் மக்களவைத் தேர்தலை திருவள்ளூர் தொகுதி சந்தித்து வருகிறது.

ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் இருந்து பிரிந்த கும்மிடிப்பூண்டி, பூந்தமல்லி, பொன்னேரி, திருவள்ளூர் ஆகிய தொகுதிகள் மற்றும் ஆவடி, மாதவரம் என மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கி திருவள்ளூர் மக்களவைத் தொகுதி மறு உருவாக்கம் செய்யப்பட்டது.

வெளியூர்வாசிகள் :

திருவள்ளூர் தொகுதியானது ஆந்திராவுக்கு மிக நெருக்கமாக இருப்பதால் இங்கு தெலுங்கு பேசுபவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவிற்கு அதிகமாக உள்ளது. இங்கு தொழிற்சாலைகள் அதிகம். குறிப்பாக கும்மிடிப்பூண்டி, திருமுல்லைவாயில், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ளன.

முக்கிய பங்கு :

தொழிற்பேட்டைகள் அதிகமாக உள்ள காரணத்தால், அண்டை மாநிலங்களில் இருந்தும், வெளிமாவட்டங்களில் இருந்தும் குடியேறிய மக்கள் மிக அதிகமாக இங்கு இருக்கின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் வாக்காளர் அடையாள அட்டை பெற்றுள்ளனர். இதனால் அவர்களின் ஆதிக்கம் தேர்தலில் மிக முக்கிய பங்கு வகிக்கும்.

அதிமுக – பி.வேணுகோபால் :

2009 முதல் தேர்தலை சந்தித்து வந்த திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் முதல் வெற்றியாளராக அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் வெற்றி பெற்றார். மீண்டும் அவருக்கு 2014 ஆம் ஆண்டு வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முக்கிய பொறுப்பாளர் ரவிக்குமாரை விட சுமார் 3.2 லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் என்ற பெருமையை பெற்றார்.

திமுக ஆதிக்கம் :

திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் உள்ள சட்டமன்ற தொகுதிகளை கவனித்தால், அதில் ஐந்து தொகுதிகளில் திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர். ஒரு தொகுதியில் காங்கிரஸ் (திமுக கூட்டணியில் ஒரு அங்கம் வகிக்கும் கட்சி) வெற்றி பெற்று உள்ளது. இதனால் தற்போதைக்கு திமுகவின் சாதகமான மக்களவை தொகுதியாக இருக்கிறது.

தனித்தொகுதி :

திருவள்ளூர் மக்களவைத் தொகுதி என்பது தனி தொகுதியாக இருப்பதால், பட்டியலினத்தைச் சேர்ந்த வேட்பாளர்களே இங்கு களம் இறக்கப்படுகின்றனர். மேலும், பொன்னேரி, பூந்தமல்லி ஆகிய தொகுதிகளும் சட்டமன்ற தனி தொகுதிகளாக இங்கு இருக்கின்றது.

கணிக்கமுடியாத நிலை :

அதிக முறை தேர்தலை சந்திக்கவில்லை என்பதாலும், சட்டமன்றத் தொகுதிகளிலும் இப்போது திமுக வென்று இருந்தாலும் முன்னர் அதிமுக, திமுக என வெற்றிகள் மாறி மாறிபெற்று இருப்பதாலும் இந்த தொகுதியில் இவர்கள்தான் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்று கணிப்பது மிகவும் சிரமம் என்றே கூறலாம்.

ஏனென்றால் 2014இல் தமிழ்நாட்டிலே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர், 2019ஆம் ஆண்டு தேர்தலில் திமுக கூட்டணியில் நின்ற காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் வெற்றி நிலவரம் என்பது கணிக்க முடியாத அளவிலேயே உள்ளது.

2019 தேர்தல் முடிவுகள் :

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் சேர்ந்த  கே. ஜெயக்குமார் வெற்றி பெற்றார். இந்த தேர்தலில் அரசியல் கட்சி வேட்பாளர்கள்,  சுயேட்சை வேட்பாளர்கள் என மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ்வேட்பாளர்  கே. ஜெயக்குமார்  அதிமுக வேட்பாளர் பொ. வேணுகோபாலை 3,56,955 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். காங்கிரஸ் வேட்பாளர் கே. ஜெயக்குமார் 7,67,292 வாக்குகளும், அதிமுக வேட்பாளரான பொ. வேணுகோபால் 4,10,337 வாக்குகளும் பெற்றார்.

2021 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் :

திருவள்ளூர் மக்களவை தொகுதிக்கு கும்மிடிப்பூண்டி, பொன்னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி, மாதவரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் வெற்றி நிலவரம் குறித்து இதில் பார்க்கலாம்.

தொகுதிகள் வெற்றி தோல்வி
கும்மிடிப்பூண்டி டி. ஜெ. கோவிந்தராஜன் (திமுக)
பிரகாஷ் (அதிமுக)
பொன்னேரி (தனி) துரை சந்திரசேகர் (காங்கிரஸ் )
ப. பலராமன் (அதிமுக )
திருவள்ளூர் வி. ஜி. ராஜேந்திரன் (திமுக)
ரமணா பி.வி (அதிமுக)
பூந்தமல்லி (தனி) அ. கிருஷ்ணசாமி(திமுக )
ராஜமன்னார் (பாமக )
ஆவடி சா. மு. நாசர் (திமுக)
க. பாண்டிய ராஜன் (அதிமுக )
மாதவரம் சு. சுதர்சனம் (திமுக)
மாதவரம் மூர்த்தி(அதிமுக)

வாக்காளர்கள் விவரம் :

ஆண்கள் பெண்கள் மூன்றாம் பாலினத்தவர்கள் மொத்தம்
1010968 1046755 375 2058098

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்