மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பு!
தமிழகம் முழுவதும் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பகுதிகளில் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டு வரும் நிலையில், சில இடங்களில் போட்டி நிலவி, வெற்றி பெற்று வருகின்றனர்.
அதுமட்டுமில்லாமல், சில இடங்களில் பிரச்சனை காரணமாக மறைமுக தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், கன்னியாகுமாரி மாவட்டம் மைலாடி பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது. சுயேச்சை வேட்பாளர் சிவசங்கரை அதிமுகவினர் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவரை மீட்கக் கோரி திமுக, பா.ஜ.க,வினர் புகார் அளித்து சாலை மறியல் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் பேரூராட்சி தலைவர் பதவிக்கான மறைமுக தேர்தல் ஒத்திவைப்பட்டுள்ளது.
இதனிடையே, நாகர்கோவில் மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் மகேஷ் வெற்றி பெற்ற நிலையில், பாஜக வேட்பாளர் மீனா தேவ் தோல்வி அடைந்துள்ளார். பெரும்பாலான மேயர்கள் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்ட நிலையில், நாகர்கோவிலில் ஏற்பட்ட திடீர் போட்டியால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.
மேலும், இதற்கு முன்பு இன்று காலை கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், அதிமுக ,திமுக இடையே மோதல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தலை ஒத்திவைப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பாலசுப்பிரமணியம் அறிவித்திருந்தார்.
இதுபோன்று, தென்காசி மாவட்டம் குற்றாலம் பேரூராட்சிக்கான தலைவர் தேர்தல் போதிய உறுப்பினர்கள் வராததால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் நகராட்சி தலைவர் பதவிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 27 கவுன்சிலர்களில் 13 கவுன்சிலர்கள் மட்டுமே இருந்ததால் தேர்தல் அதிகாரி தேர்தலை ஒத்திவைத்துள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.