மறைமுக தேர்தல் – அதிமுக – திமுகவினரிடையே மோதல்.. போலீஸ் தடியடி!
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றது. உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத்தொடர்ந்து மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் மற்றும் துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று, பதவியேற்று வருகின்றனர்.
இந்த நிலையில் புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக – திமுகவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பு மோதலை தடுக்க போலீசார் தடியடி நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவியை கைப்பற்ற திமுக – அதிமுக இடையே கடும் போட்டி என கூறப்படுகிறது. அன்னவாசல் பேரூராட்சி அலுவலகத்துக்குள் கல்வீசப்பட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
காவல்துறையினருடன் திமுகவினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டுள்ள நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது. திமுகவினரை அனுமதிக்க மறுப்பதாக கூறி போராடியவர்கள் மீது தடியடி நடத்தி போலீசார் கலைத்தனர். தலைவர் தேர்தலில் பிரச்சனை ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தியுள்ளனர். கல்வீச்சு சம்பவத்தை தொடர்ந்து பிரச்சனை செய்த திமுகவினரை தடியடி நடத்தி போலீஸ் விரட்டியடித்தது. தலைவர் தேர்தலை முன்னிட்டு அப்பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக பெரும்பான்மையுடன் உள்ள நிலையில், தேர்தலை நடத்தவிடாமல் திமுகவினர் எதிர்ப்பதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. கல்வீச்சு மற்றும் காவல்துறையின் தடியடியால் போராட்டக்காரர்கள் சிலர் காயமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, புதுக்கோட்டை அன்னவாசல் பேரூராட்சி தலைவர் பதவி தேர்தலில் அதிமுக சாலை பொன்னம்மாள் வெற்றி பெற்றுள்ளார். இதனிடையே, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் பேரூராட்சி 1வது வார்டு அதிமுக வேட்பாளர் சாலை. பொன்னம்மா 51 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.
இதுபோன்று மதுரை உசிலம்பட்டி நகராட்சி அலுவலகத்தில் கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது. உசிலம்பட்டி நகராட்சி தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர் மனு தாக்கல் செய்துள்ளார். திமுக வேட்பாளர் செல்விக்கு எதிராக திமுகவை சேர்ந்த சகுந்தலா மனு தாக்கல் செய்த நிலையில், கல்வீச்சு சம்பவம் நடந்துள்ளது.