இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும்..! பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு.!
திருவாருர் மாவட்டத்தில் நாகை எம்.பி. செல்வராஜ் அவர்களின் இல்ல திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், வருகிற நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் மற்றும் 9 வருட பாஜக ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் என்னவெல்லாம் என்பது குறித்து பேசியுள்ளார்.
அவர் பேசியதாவது, “நாடாளுமன்ற தேர்தலை நாம் எதிர்நோக்கி காத்திருக்கிறோம். அந்த நாடாளுமன்றத் தேர்தலை எப்படி சந்திக்க வேண்டும் என்று சொன்னால், ஏதோ ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வருகிறது என்று நாம் நினைத்து விடக்கூடாது. அதையும், தாண்டி சொல்கிறேன், ஆட்சி மாற்றத்திற்காக நடைபெறுகிற தேர்தல் என்று கூட நிர்ணயம் செய்யக்கூடாது.”
“இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். இன்றைக்கு சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க கூடிய, ஒரு பாசிச ஆட்சியை நடத்திக் கொண்டிருக்க கூடிய பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஏனென்றால், தமிழ்நாட்டை காப்பாற்றி விட்டோம். இந்தியாவை காப்பாற்ற கூடிய நிலையில் நாம் இப்பொழுது இருக்கிறோம். இந்தியாவை காப்பாற்றுவதற்காக தான் இந்தியா கூட்டணி அமைந்திருக்கிறது.”
“பீகார் மாநிலத்தில் நிதீஷ் குமார் அவர்கள் தலைமையில் கூடி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு கூட்டணி உருவாக, முதல் கூட்டத்தை நடத்தினோம். அதற்கடுத்து கர்நாடகா மாநிலத்துடைய தலைநகரமாக இருக்கக்கூடிய பெங்களூரில் இரண்டாவது கூட்டத்தை நடத்தினர். அதில் தான் இந்தியா என்கிற பெயரை தேர்வு செய்து, நமது கூட்டணிக்கு பெயர் அறிவித்தோம். அடுத்து மூன்றாவதாக வருகிற ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய இரண்டு நாள் மும்பையில் மூன்றாவது கூட்டம் நடைபெற இருக்கிறது”
“அதில் முக்கிய முடிவுகள் எல்லாம் நாம் அறிவிக்க இருக்கிறோம். நானும் அந்த கூட்டத்திற்கு செல்ல விருக்கிறேன். ஆகவே, தமிழ்நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாகுவதற்கு நீங்கள் எல்லாம் எவ்வாறு காரணமாக இருந்தீர்களோ, அதே போல் ஒன்றியத்தில் நாடாளுமன்ற தேர்தல் மூலமாக நடைபெற இருக்கின்ற மத்திய அரசு அமைவதற்கு, அது நல்ல அரசாக அமைவதற்கு நீங்கள் காரணமாக இருக்க வேண்டும்.”
“தேர்தல் பிரச்சாரத்தை இங்கு தொடங்கி வைக்க வேண்டும் என்று நம்முடைய முத்தரசன் அவர்கள் குறிப்பிட்டார்கள். அதை தொடங்கலாம் என்று வந்திருக்கிறேன். நான் எப்பொழுதும் தேர்தல் பிரச்சாரத்தை திருவாரூரில் தான் தொடங்குவேன். இப்போதும் அதே உணர்வோடு தான் இந்த மேடையில் உங்கள் முன்னாலே நின்று கொண்டிருக்கிறேன். ஒன்பது வருடங்களாக பாஜகவினுடைய ஆட்சியில் மோடி அவர்களுடைய தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது .”
“இந்த ஒன்பது வருடமாக நாங்கள் இந்த ஆட்சிக்கு வந்து இதை செய்திருக்கிறோம். இந்த திட்டங்களை அறிவித்திருக்கிறோம். இதை நிறைவேற்றி இருக்கிறோம். சாதனைகளை படைத்திருக்கிறோம், மக்களுக்கு இப்படியெல்லாம் நன்மைகளை செய்து இருக்கிறோம் என்று ஏதாவது அவர்களால் சொல்ல முடிகிறதா, எதுவும் சொல்ல முடியவில்லை.”
“தேர்தலுக்கு முன்னால் என்ன சொன்னார்கள் வெளிநாடுகளில் இருக்கக்கூடிய கருப்பு பணத்தை எல்லாம் கைப்பற்றி, அதை இந்தியாவுக்கு கொண்டு வந்து நாட்டு மக்கள் அத்தனை பேருக்கும் ஒவ்வொருவருக்கும் தலா 15 லட்சம் ரூபாய் கொடுக்கப் போகிறேன் என்று அறிவித்தார். நான் பல கூட்டங்களில் கேட்டேன், நான் மட்டுமல்ல அனைவரும் கேட்டார்கள். 15 லட்சம் வேண்டாம் 15 ஆயிரம் ஆவது தாருங்கள், 15,000 வேண்டாம் ஒரு 15 ரூபாயாவது கொடுத்தார்களா.?” இதுவரை கிடையாது”
“ஆகவே நாட்டில் இருக்கக்கூடிய இளைஞர்களுக்கு, ஒரு ஆண்டிலேயே இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தருவோம் என்று உறுதிமொழி கொடுத்தார்கள். எங்காவது வேலை வழங்கப்பட்டு இருக்கிறதா.? ஒன்றிய அரசு மூலமாக வேலைகள் பறிக்கப்பட்டு இருக்கிறது. இதுதான் இந்த ஆட்சியினுடைய நிலை. இதைவிட கொடுமை மதத்தை வைத்து ஆங்காங்கே மதக் கலவரங்களை ஏற்படுத்தி நாட்டை இரண்டாக்க கூடிய சூழ்நிலையிலே ஒரு கொடிய ஆட்சி இந்தியாவில் நடந்து கொண்டிருக்கிறது.”
“இதை பற்றி எல்லாம் கலந்து பேசி இதற்கு ஒரு முடிவு எடுக்க வேண்டும். இந்த ஆட்சியை ஒழித்தாக வேண்டும். தேர்தலில் நல்ல பாடப் புகட்ட வேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா என்ற தலைமையிலேயே ஒரு கூட்டணியை நாம் அமைத்திருக்கிறோம். இது பிரதமர் மோடியாக தாங்க முடியவில்லை. ஆகவே, தமிழ்நாட்டை பொறுத்த வரைக்கும் எப்படி நாடாளுமன்ற தேர்தலில், சட்டமன்றத் தேர்தலில், உள்ளாட்சி அமைப்பு தேர்தலில் ஒரு கூட்டணி அமைத்து பலமாக அந்த கூட்டணியை வழிநடத்திக் கொண்டிருக்கிறோமோ அந்த கூட்டணி தொடர்ந்து தமிழ்நாட்டில் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறது என்று எல்லாருக்கும் நன்றாக தெரியும்”
“ஆக அப்படிப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கக்கூடிய இந்த கூட்டணியும் அந்த இந்தியா என்கிற கூட்டணியில் சேர்ந்திருக்கிற இந்தியா என்கிற கூட்டணிக்கு உருவாவதற்கு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய இந்த கூட்டணி காரணமாக இருக்க என்கிற ஒரு ஆத்திரம் பிரதமராக கூடியிருக்கிறார் மோடிக்கு வந்திருக்கிறது.”
“அதனால் தான் எங்கு போனாலும், அது சுதந்திர நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, கொடியேற்று விழா நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது பல மாநிலங்களுக்கு சென்று அங்கே நடத்தக்கூடிய அரசியல் நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளுக்கு போகக்கூடிய நிகழ்ச்சிகளாக இருந்தாலும், எங்கு போனாலும் இன்றைக்கு நாம் அமைத்திருக்கிற கூட்டணியை பற்றி கொச்சைப்படுத்தி பேசுகிறார்.”
“அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய நம்முடைய அணியை பற்றி திமுகவை பற்றி இன்றைக்கு இவரால் பேசாமல் இருக்க முடியவில்லை. அந்த அளவிற்கு கேவலப்படுத்தி கொச்சைப்படுத்தி பேசுகிறார். என்ன பேசுகிறார் தமிழ்நாட்டில் ஊழல் வந்துவிட்டது என்று ஒன்பது வருடமாக சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த ஊழலை நான் ஒழித்தே தீருவேன் இந்தியாவில் இருக்கக்கூடிய ஊழலை ஒழித்தேத் தீருவேன் என தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்.”
“நான் பிரதமர் மோடி அவர்களை பார்த்து கேட்டுக் கொள்ள விரும்புவது. ஊழலை பற்றி பேசுவதற்கு யோக்கியதை பிரதமராக இருக்க கூடிய மோடிக்கு உண்டா.? உங்களுடைய வண்டவாளம் எல்லாம் இப்பொழுது ஆதாரம் எடுத்து வெளியிடுகிறார்கள். அனைத்தையும் குறித்து தான் வந்திருக்கிறேன். ஏனென்றால் புள்ளி விவரம் இருக்கிறது. தவறாக பேசி விடக்கூடாது. எதையும் ஆதாரத்துடன் தான் பேசணும்.”
“ஊழலை பற்றி பேசுவதற்கு பாஜகவிற்கு என்ன அருகதை இருக்கிறது. சிஏஜி அறிக்கை இன்று என்ன சொல்கிறது. அது ஒரு ஆய்வு அறிக்கை. மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு இருக்கக்கூடிய ஒரு அமைப்பு. ஒவ்வொரு வருடமும் அந்த அரசினுடைய நிலையைப் பற்றி, அந்த அரசு செய்திருக்கக்கூடிய செலவுகளை பற்றி ஆய்வு செய்து, அதற்கு ஒரு ஒப்பீடு கொடுப்பார்கள். அதுதான் சிஏஜியினுடைய வேலை.”
“அந்த சிஏஜி என்ன சொல்கிறது என்றால் ஒன்றியத்தில் நடைபெறக்கூடிய பாஜக ஆட்சி ஊழல் முறைகேடுகள் அதிகம் உள்ள ஆட்சி. லஞ்ச லாவண்யம் புகுந்து போன ஆட்சி என்று சொல்கிறது. நாங்கள் சொல்லவில்லை. எதிர்க்கட்சி சொல்லவில்லை. நாங்கள் சொல்வதாக நீங்கள் நினைக்க வேண்டாம். நாங்க ஏற்கனவே சொல்லிக் கொண்டிருக்கிறோம் அது வேறு. இப்பொழுது யார் சொல்கிறார்கள், சிஏஜி சொல்கிறது. மத்திய கணக்கு துறையுடைய உடைய அறிக்கை சொல்கிறது. ஏழு விதமான ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.”
“ஒன்று பாரத் மாதா திட்டம், இரண்டு துவாரகா விரைவுப் பாதை கட்டுமான திட்டம், மூன்று சுங்கச்சாவடி கட்டணங்கள், நான்கு ஆயுஷ்மான் பாரத் திட்டம், ஐந்து அயோத்தியா மேம்பாட்டு திட்டம், ஆறு கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வு திட்டம், ஏழு ஹெச்ஐஎல் விமான வடிவமைப்புத் திட்டம். இந்த ஏழு திட்டங்களிலும் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக எடுத்துச் சொல்லி இருக்கிறது. நிதியை கையாள்வதில் மோசடிகள் அரங்கே இருக்கிறது என்று இந்த அறிக்கை வட்ட வட்டமாக அம்பலப்படுத்தி இருக்கிறது.” என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.